ஹிஜாப் உடைக்கு எதிரான போராட்டம்; இதுவரை 50 பேர் பலி

0
368

ஹிஜாப் உடைக்கு எதிரான ஈரானிய மக்களின் போராட்டம் பல மாகாணங்களில் வியாபித்துவரும் நிலையில், இதுவரை 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில் ஹிஜாப் உடை கட்டாயமாக்கப்பட்ட நிலையில், பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு பொலிசார் பொது இடங்களில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், கடந்த 13ம் திகதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் பயணப்பட்டுள்ளார்.

அப்போது காஸ்த் எர்ஷாத் அதிகாரிகள், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். மட்டுமின்றி அவரை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

மேலும் விசாரணையின்போது அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் கடந்த 16ம் திகதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

போர்க்களமாக மாறிய நாடு... இதுவரை 50 பேர் பலி: ஆயிரக்கணக்கானோர் கைது | Iran Into War Zone Hijab Issue

மாஷா அமினியின் மரணம் ஈரான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தலைநகர் தெஹ்ரான் உட்பட நாடு முழுவதும் பெண்கள் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தலைநகர் தெஹ்ரானில் நாள்தோறும் இரவில் பெண்கள், பொதுமக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 80 நகரங்களில் போராட்டம் வியாபித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நாடு முழுவதும் பொலிசார் முன்னெடுத்த துப்பாக்கிச்சூடு, தடியடி தாக்குதலில் இதுவரை 50 பேர் மரணமடைந்துள்ளதாகவும், இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் எனவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி, பெண்கள் பலர் தங்கள் ஹிஜாப்களை உருவி தீயிட்டு கொளுத்தியதுடன், பலர் தங்கள் தலைமுடியையும் வெட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.