தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டதன் காரணமாக சுவாரிஸ் பிரேமசந்திர, நிஷாந்த பெரேரா , ஷாலிக்கா தில்ஹானி ஆகிய இலங்கை சைக்கிளோட்ட வீர,வீராங்கனைகள் மூவருக்கு 4 வருட கால போட்டித் தடை விதிப்பதற்கு இலங்கை ஊக்க மருந்து தடுப்பு முகாம் (Sri Lanka Anti Doping Agent – SLADA) நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த மார்ச் 6 ஆம் திகதியன்று முடிவடைந்திருந்த விமானப் படையின் சைக்கிளோட்டப் போட்டியின் கடைசி கட்டத்தின்போது எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரியில் எடுக்கப்பட்ட சிறுநீர் பரிசோதனையின்போது இவர்கள் மூவரும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொள்ளப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.
மேலும், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டமையை அவர்கள் மூவரும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீர்ப்பு
இதன்படி, சுவாரிஸ் பிரேமசந்திர, நிஷாந்த பெரேரா , ஷாலிக்கா தில்ஹானி ஆகிய மூவருக்கும் 2022 மார்ச் 6 ஆம் திகதி முதல் 2026 மார்ச் 5 ஆம் திகதி வரையான 4 வருட கால போட்டித் தடை விதிக்கப்படவுள்ளது. இந்த தடை காலத்தில் விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் விலகியிருக்கும்படியும் அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போட்டித் தடை விதித்தமை குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் இலங்கை ஊக்க மருந்து தடுப்பு முகாமின் மேன் முறையீட்டு சபையிடம் தங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், எந்தவொரு ஆட்சேபனைகளும் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை எனவும் மேன்முறையிட்டு சபை குறிப்பிட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து இலங்கை சைக்கிளோட்ட சங்க செயலாளர் குறிப்பிடுகையில்,
“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு நான் வீர, வீராங்கனைகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். நோய்த்தாக்கங்கள் காரணமாக எவறேனும் ஒருவர் மருந்துகள் உட்கொள்ளுபவராக இருப்பின், அவர்கள் விளையாட்டு மருத்துவ நிறுவனத்திடம் ஆலோசனைகள பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.