‘WORK FROM HOME’க்கு ஆதரவாக போராட்டம் ஆரம்பித்த ஆப்பிள் ஊழியர்கள்!

0
530

வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ‘WORK FROM HOME’ முறையை கைவிடும் நடைமுறையின் ஒரு பகுதியாக வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகம் வரச் சொன்ன நிர்வாகத்தை கண்டித்து ஆப்பிள் ஊழியர்கள் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

கொரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால், பல்வேறு அலுவலகப் பணியாளர்களும் வீட்டில் இருந்து பணி புரிய நிறுவனங்கள் அனுமதி அளித்தன.

மேலும் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதால் நல்ல லாபம் கிடைத்துள்ளதாகக் கூறி பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ‘WORK FROM HOME’ முறையை தற்போதும் தொடர்ந்து வருகின்றன.

எனினும் கொரோனா தொற்று குறைந்துவிட்ட சூழலில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலத்திற்கு திரும்பும்படி அழைத்து வருகின்றன.

அதன்படி தற்போது டெக் உலகின் ராஜா ஆப்பிள் இன்க் சமீபத்தில் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று தெரிவித்து அதற்கு காலக்கெடுவாக செப்டம்பர் 5 ஆம் திகதியை நிர்ணயித்தது ஆப்பிள் நிறுவனம். 

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் எடுத்த இம்முடிவிற்கு அந்நிறுவன ஊழியர்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட துவங்கியுள்ளனர்.

ஆப்பிள் நிறுவன ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமான Apple Together மிகவும் நெகிழ்வான பணிச்சூழலைக் கேட்டு ஒரு கையெழுத்து இயக்கத்தை துவங்கியுள்ளது.

போராட்டமாக முன்னெடுக்கப்படும் இவ்வியக்கத்தில் 270க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.