மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்!

0
369

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்திற்கான ஒருங்கமைப்பில் இன்றையதினம் (21-08-2022) காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் பெற்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய கோரியும் இலங்கையில் இடம்பெற்ற ஜனநாயக போராட்டங்களில் கலந்து கொண்ட போராட்டகாரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட தரப்பு தமிழர் என்ற வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் எனவும் ஜனநாயக அறவழிப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவ செயற்பாட்டாளர்கள், இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும், அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க கூடாது எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அங்கத்தவர்கள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள், பெண்கள் குழுக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மன்னார் மெசிடோ நிறுவன அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான இணையத்தின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அனைத்து அறவழி போராட்டக்காரர்களும் உடனடியாக விடுதலை செய்க,மாணவர் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டகாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கையளிப்பதற்கு என தயாரிக்கப்பட்ட பொது மகஜரும் போராட்டத்தின் போது வாசிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.