13 வருடங்களின் பின்னர் உலுக்கியெடுத்த மே மாதம்!

0
237

13 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் இரத்தம் பார்த்து கொளுந்துவிட்டெரியும் தீயை பார்த்து வீதியெங்கும் இராணுவத்தையும் இராணுவ கவச வாகனங்களையும் பார்த்து துப்பாக்கிக்குண்டு துளைக்கும் சத்தத்தையும் கேட்டுள்ளது.

13 வருடங்களுக்கு முன் 2009இல் இதேபோன்றதொரு மே மாதத்தில் வடக்கு, கிழக்கில் கண்ட அழிவு இவ்வருடம் இம்மாதத்தில் கொழும்பு மற்றும் தென்னிலங்கையில தலைவிரித்தாடியிருந்தது.

13 வருட சாபத்தின் வெளிப்பாடா இந்த நிகழ்வு? சாபம் யாருக்கு? அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படும் போது வாய் திறக்காது வேடிக்கை பார்த்தவர்களுக்கா இல்லை ராஜபக்சர்களுக்கா என ஆதங்க குரல்கள் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

எந்தவொரு அரசியல் கட்சியினதும் பின் புலம் இன்றி, பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த முடியாத, தம்மை ஒரு நேரமாவது வயிறாற உண்டு வாழ வழி விடுமாறு கோரும் அப்பாவி மக்களுக்கு பயந்து மகிந்த ஓடி ஒளியும் நிலை வருமென அவரே நினைத்திருப்பாரா என கேள்விக்கணைகள் மக்களால் தொடுக்கப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளை வென்று, தற்போது கொதித்துப் போயுள்ள இதே மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தில் பாற்சோறு சமைத்து வெற்றி நாயகன் என்ற புகழ்ச்சியில் மெய் மறந்து நனைந்துப் போயிருந்த மகிந்தவின் அரசியல் பக்கங்களை புரட்டிப் போட்டது விதியா? சாபமா? கண்ணீரா? என்ற கேள்விகள் இன்னொரு புறம்.

கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி மக்களுக்காக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உரையாற்றிய போது “1988 மற்றும் 89களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான இளம் உயிர்களை நம் நாடு இழக்க நேரிட்டது.

அன்று நாம் எமது இளைஞர்களின் உயிர்களை காப்பதற்காக மேற்கொண்ட கஷ்டம் உங்கள் மூத்தோர்களின் நினைவிலிருக்கும் என்பதை நாம் அறிவோம்.

தெற்கு போன்றே வடக்கு இளைஞர்களுக்கும் நான் அது குறித்து ஞாபகப்படுத்த வேண்டும். அந்த கடந்த காலத்தை உங்களது பெற்றோர் மற்றும் மூத்தோர்களிடம் கேட்டறிந்து கொள்ளலாம்” என ஒரு மறைமுகமான எச்சரிக்கையை விடுத்திருந்தார் என செய்திகள் வெளியாகியிருந்தன. 

இந்த எச்சரிக்கையானது பயத்தை ஏற்படுத்தியதா என்பதை விட பாதிக்கப்பட்டிருந்த இளைஞர்களை மேலும் கொதித்தெழச் செய்திருந்தது என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது.

இவ்வாறு அரசாங்கத்தினதும், ராஜபக்சர்களினதும் ஒவ்வொரு செயற்பாடுகளுமே கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம என்பன உருவாக காரணமாக அமைந்தன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இலங்கை வரலாற்றில் என்றுமே இவ்வாறானதொரு நிலைமை தமக்கு ஏற்படவில்லை என்பதே சிங்கள மக்களின் குறிப்பாக தென்னிலங்கை மக்களின் ஆதங்கமாக உள்ளது.

கோவிட் தொடங்கிய காலத்திலிருந்து இலங்கை மக்களை சூழ ஆரம்பித்தது பொருளாதார சரிவு எனும் இருள். கோவிட் காலத்தில் இலங்கையின் வருவாயை பெருக்குவதற்காக சுற்றுலாப் பயணிகள் வர அனுமதிக்கப்பட்ட தீர்மானது, அடுத்த சில ஆண்டுகள் மக்களின் வயிற்றுக்கு பெரிய அடியை விழச் செய்ததாக பலரும் கூறுகின்றனர்.

அங்கு தான் இந்த பொருளாதார சரிவு கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. கோவிட் காலத்தில் தொடர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அன்றாட கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியது.

இந்த நிலைமையானது உணவுச் சங்கிலி போல் ஒன்றாய் பிணைந்து வாழும் இலங்கையில் அனைவரின் வாழ்வையும் ஆட்டங் காணச் செய்தது. இந்த இரத்தக் கொதிப்பின் வித்தே தற்போது காலிமுகத்திடலில் மாபெரும் விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது என்பது பலரின் ஆணித்தரமான நம்பிக்கை.

தென்னிலங்கை மக்களின் நிலைமை இவ்வாறு இருக்க வடக்கு, கிழக்கு தமிழர்களின் நிலையை அவர்களின் பிரதிநிதியாய் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இவ்வாறு விளக்கியிருந்தார்.

அதன்படி “நாம் கடும் நெருக்கடியோடு வாழ்ந்தவர்கள். ஒரு கால கட்டத்தில், 90களில் இலங்கையில் மண்ணெண்ணெய் 12 ரூபாய்க்கு விற்கப்பட்ட போது நாம் 300 ரூபாய்க்கு வாங்கியவர்கள்.

அப்போது யூரியாவை கண்ணால் காணவில்லை, உடுப்பு துவைப்பதற்கு சவர்க்காரங்களைக் காணவில்லை, நாங்கள் இந்த மண்ணிலே பெட்ரோலை கண்டிருந்ததில்லை, சீமெந்துகளை கம்பிகளை கண்டிருந்ததில்லை அவ்வாறு இருந்தும் இந்த மண்ணிலே நாங்கள் வாழ்ந்து இருந்தோம்.

எங்களுடைய வாழ்க்கை நகர்ந்திருந்தது. அதனை இப்போது தான் சிங்கள மக்கள் படிக்கவும் உணரவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆகவே பொருளாதார தடை என்பதும் பொருளாதாரத்தின் மீதான ஒரு வகையான ஆக்கிரமிப்பு என்பதும் இப்போதுதான் சிங்கள மக்களை உணர வைத்திருக்கிறது . தமிழர்கள் ஏற்கனவே இவற்றை நேரடியாக அனுபவித்து வாழ்ந்தவர்கள்” என குறிப்பிட்டிருந்தார்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற பாடத்தை கற்று கற்பித்து வாழ்ந்து வந்த தமிழர்கள் நாம் இன்று கண்முன்னே காண்பது அதைத்தானா? என்கிறன கோபக்குரல்கள்.

தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் தலைநகரான திருகோணமலையில் தஞ்சம் புகும்படியான நிலை ஏற்பட்டுள்ளதை வேறு எப்படி பார்ப்பது? என்பதும் அவர்களின் கருத்தே.

வரலாற்று பாடங்களில் அனைத்து அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டிய படிப்பினை ஒன்று மாத்திரமே. மக்கள் சக்தி என்பது எவராலும் கட்டுப்படுத்தப்பட முடியாத சுனாமி போன்றது.

யார் அரசியல்வாதியென்றாலும் மக்களுக்காகவே அவர்களே தவிர ஒரு போதும் மக்கள் அவர்களுக்காக அல்ல.

இந்த மே 9ஆம் திகதி மக்கள் புரட்சியானது அழிக்க முடியாத படிப்பினையாக அரசியல் என்ற களத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் அனைவருக்கும் அமையப்போகிறது.

பதவி, பட்டம், பணம், ஊழல், மக்களின் பணத்தை சூறையாடல், மக்களை பசி பட்டினுக்குள் தள்ளல் என்பவற்றை நினைத்துக்கூட பார்க்க முடியாத அரசியல்வாதிகள் உருவாக்கப்பட வேண்டியதற்கான பாடம்.