கடும் வெப்பம்: ஒடிசாவில் காலை 6 மணிக்கு பள்ளிகள் திறப்பு

0
455

கடும் வெப்பம் காரணமாக ஒடிசாவில் பள்ளிகள் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டன. 

இந்தியாவில் ஏப்ரல் மாதம் முழுக்க சராசரியாக 35.9 டிகிரி செல்சியஸ் முதல் 37.78 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம் பதிவாகியுள்ளது. இது 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபடியான சராசரி வெப்பநிலை என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரத்தின் விதா்பா பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மே மாதம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபடியான சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு 35.9 டிகிரி செல்சியஸ் முதல் 37.78 டிகிரி செல்சியஸ் வரை சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாட்டின் வடமேற்குப் பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு 35.4 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை பதிவானது. அதற்கு முன்பு 1973ஆம் ஆண்டு 37.75 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை பதிவானது. 

காலநிலை மாற்றத்தின் எதிரொலியாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒடிசா மாநிலத்திலும் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி இந்த நடைமுறை ஒடிசா மாநிலத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது.

இருப்பினும் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் அனைத்தும் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என்று அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.