கடன்தொகையை உடனடியாகச் செலுத்துமாறு இலங்கைக்கு சர்வதேச எண்ணெய் நிறுவனம் அழுத்தம்!

0
56

ஐக்கிய அரபு இராட்சியத்தை சேர்ந்த பிரபல எண்ணெய் விநியோக நிறுவனம் இலங்கைக்கு பாரிய கடன் அழுத்தத்தை பிரயோகிப்பதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு இராட்சிய நிறுவனத்திடம் இருந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான கொடுப்பனவிற்கே இந்த அழுத்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு கடன்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்பவற்றுக்கான கடன் வழங்கலை இலங்கை அரசாங்கம் பிற்போட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நிறுவனம் 95,000 மெட்ரிக் டன் எண்ணெய்யை இலங்கைக்கு விநியோகித்து அதற்கான கொடுப்பனவினை வழங்குவதற்கு 200 நாட்கள் காலவகாசம் வழங்கியிருந்தது.

எனினும், தற்போது 80 நாட்களுக்குள் தமக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கையை அந்த நிறுவனம் நிர்பந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் ஏனைய எண்ணெய் நிறுவனங்களும் இதே நிலையை பின்பற்றலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா, குவைட் மற்றும் ஒமான் ஆகிய நாடுகளில் உள்ள எண்ணெய் விநியோக நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளும் பிற்போடப்பட்டுள்ளதாக திறைசேரி தகவல்கள் தெரிவிக்கின்றன.