இலங்கையை மீட்க சீனாவின் ஆதரவு கோரிய சஜித்!

0
464

இலங்கையைத் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீட்கச் சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, இந்தப் பேரிடர் தருணத்தில் இலங்கைக்குச் சகோதரத்துவக் கரம் நீட்டும் சீனாவுக்குத் தான் நன்றி தெரிவிப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவி வரும் நீண்டகால இரு தரப்பு உறவுகளையும் இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.

இலங்கையைத் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்காகச் சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் தலையீடு செய்யுமாறும் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.