கோபா குழு மதுவரித் திணைக்களத்துக்கு விடுத்துள்ள பணிப்புரை

0
346

மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் இறைவரித் திணைக்களம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து மதுவரி வருவாயைக் கணக்கிடும் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் கணினி கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) மதுவரித் திணைக்களத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.

மதுவரித் திணைக்களம் தொடர்பான 2020ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயற்திறன் குறித்து ஆராயும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) திஸ்ஸ விதாண தலைமையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கூடியபோதே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

கணினிக் கட்டமைப்புக்கான பூர்வாங்கப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2023 ஜனவரிக்குள் இது நிறைவடையும் என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரிவித்தார். மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து விலைமனுக்களைக் கோரி இக்கட்டமைப்பைப் பூர்த்திசெய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு குழு சுட்டிக்காட்டியது. மதுவரித் திணைக்களத்தின் முயற்சிகளைப் பாராட்டிய குழு, இக்கட்டமைப்பின் ஊடாக மதுவரித் திணைக்களத்தின் பணிகளை வினைத்திறனாக முன்னெடுத்து வருமானத்தை அதிகரிக்க முடியும் எனத் தெரிவித்தது.

சில அரச நிறுவனங்களுக்கு கணினிக் கட்டமைப்பை உருவாக்கி அவற்றின் செயற்பாடுகளை நெறிப்படுத்துமாறு பல வருடங்களாக அறிவுறுத்தப்பட்ட போதிலும் இதுவரையில் அதற்கான சாதகமான பதில் கிடைக்காமை வருத்தமளிப்பதாகவும் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்காக மதுபான போத்தல்கள் மற்றும் மதுபானம் தொடர்பான பொருட்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் முகாமைத்துவ முறையை பராமரிப்பதன் முன்னேற்றம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இந்த ஸ்டிக்கர் முகாமைத்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் மதுவரித் திணைக்களத்தின் வருமானம் கடந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 17% அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளமை இங்கு தெரியவந்தது.

வருவாய் மற்றும் கணக்குப் பிரிவுகளில் மதுபான ஏற்றுமதிக்கான மதுவரி குறித்த தகவல்களை ஆவணப்படுத்தி பராமரிக்காதது உள்ளிட்ட நிர்வாகக் குறைபாடுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியதுடன், அவற்றை விரைவில் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டது.