நாட்டு மக்கள் அதிருப்தியில் இருக்கும் நேரத்தில் அமைச்சு பதவியை பெற்று பயனில்லை: இ.தொ.கா

0
293

சுயாதீனமாக செயற்பட்டு வரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாக காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பீ.சக்திவேல் தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் இன்று அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை காரணமாக எமது கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தான் வகித்து வந்த ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொண்டார்.

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, எமது கட்சியின் தலைவரை தொடர்புக்கொண்ட, தான் வகித்த விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் டிஜிட்டல் தொழிற்நுட்ப அமைச்சு ஆகியவற்றை ஜீவன் தொண்டமானுக்கு வழங்கப்படும் என்பதுடன் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கால் நடை வளங்கள் அமைச்சும் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

ஜீவன் தொண்டமானுக்கு அமைச்சர் பதவி பெற்றுக்கொள்ள முடியாது என்றால், அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவியை கட்சியின் தவிசாளரும், பொருளாளருமான மருதபாண்டி ராமேஸ்வரனுக்கு வழங்க முடியும் என நாமல் ராஜபக்ச கூறினார்.

எமக்கு தேவை பதவிகள் அல்ல நாட்டின் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மக்கள் எரிபொருள், சமையல் எரிவாயு உட்பட பல பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இப்படியான நேரத்தில் மக்களுக்கு முதலில் நிவாரணங்களை அரசாங்கம் வழங்க வேண்டும்.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் திருப்தியடையாத காரணத்தினாலேயே நாங்கள் அரசாங்கத்தில் இருந்து விலகினோம். முழு நாட்டு மக்களும் தற்போதைய அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளியிட்டு வரும் சந்தர்ப்பத்தில் நாங்கள் அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை பெற்று பயனில்லை.

எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையல்லா தீர்மானம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிஸ் நடு நிலை வகிக்க முடிவு செய்துள்ளது எனவும் சக்திவேல் தெரிவித்துள்ளார்.