விடுதலைப் புலிகளின் தலைவர் பயங்கரவாதி அல்ல! பெரும்பான்மையினத்தவர் ஒருவர் யாழில் போராட்டம்

0
348

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பயங்கரவாதியாக்கியது யார் என்பதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தான் வெளிப்படுத்துவேன் என கூறி தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.

நான் எடுத்த 26 ஆயிரத்து 900 புகைப்படங்களை வழங்கியுள்ளேன். உண்மைகளை நான் வழங்கியுள்ளேன். விடுதலைப் புலிகளின் தலைவரை பயங்கரவாதியாக மாறியமைக்கு இலங்கை அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சுப்பிரமணிய பூங்கா முன்றலில் இன்று காலை 7.30மணி தொடக்கம் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் கருத்துத் தெரிவிக்கையில், 

விடுதலைப் புலிகளின் தலைவர் ஏன் பயங்கரவாதி ஆக்கப்பட்டார் – என்ன காரணத்திற்காக அவர் குற்றவாளி ஆக்கப்பட்டார் – அவர் ஒரு சாதாரண மனிதனாக இருந்திருப்பார். ஆனால் இலங்கையில் இருந்த அரசியல் பின்னணி மற்றும் ஏதோ ஒரு சூழ்ச்சியின் காரணமாகவே அவர் பயங்கரவாதி என பெயர் குறிப்பிடப்படும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். இனியும் வடக்கிலிருந்து ஒரு விடுதலைப் புலிகளின் தலைவரைப் போல் ஒருவர் உருவாகும் நிலைமையினை நாங்கள் ஏற்படுத்தக்கூடாது.

இனி பிறக்கும் குழந்தைக்கு நாங்கள் சயனைட் குப்பியை கொடுக்காது வடக்கு – தெற்கு மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு  விடுதலைப் புலிகளின் தலைவர் போன்றவர்களை நாங்கள் உருவாக்காது தடுக்க முடியும்.

தமிழ் மக்களுக்காக நான் குரல் கொடுத்தேன். நான் அவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் பற்றி பேசியவன். அவர்களே என்னை தற்போது கடுமையாக விமர்சித்து, தாக்குதல் தொடுக்க முயற்சித்து வருகின்றனர்.