போரில் தொடர்ந்து வேகமாக முன்னேற முடியாமல் திணறும் ரஷ்ய படைகள்

0
368

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 27-வது நாளை எட்டியுள்ள நிலையில், மரியு போல் நகரில் இருந்து உக்ரைன் இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ரஷ்யா கெடு விதித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில், போரில் தொடர்ந்து வேகமாக முன்னேற முடியாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றது.

பலமான எதிர் தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன் இராணுவம், தலைநகர் கீவ்வின் புறநகரை ரஷ்யாவிடமிருந்து மீட்டுள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை எதிர்த்து ரஷ்ய இராணுவம் நடத்தி வரும் போர் 27வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஆரம்பத்தில் வேகமாக முன்னேறிய ரஷ்ய இராணுவம் தற்போது பல இடங்களில் முடங்கியுள்ளது.

கெர்சன் நகரை கைப்பற்றிய பிறகு தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய 2 பெரிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய படைகள் முன்னேறிய நிலையில், தற்போது 2 இடங்களிலும் ரஷ்ய இராணுவம் திணறி வருகின்றது.

குறிப்பாக, தலைநகர் கீவ்வின் புறநகர்களில் ஒன்றான மக்காரிவிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.

புச்சா, ஹோஸ்டோமெல் மற்றும் இர்பின் ஆகிய பிற புறநகர்களில் ரஷ்யா தொடர்ந்து தரைவழியாக சண்டையிட்டு வருவதுடன், ரஷ்ய இராணுவம் பல இடங்களில் முடங்கி இருப்பதாகவும், அதன் செயல்பாடுகள் வேகம் இழந்துள்ளதாகவும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சக உளவுத்தகவல்களும் கூறுகின்றன.

இதன் காரணமாக, ரஷ்யா தற்போது தரைவழி தாக்குதலுக்கு பதிலாக அதிகளவில் வான் தாக்குதலை நடத்தி வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் உக்ரைன் மீது ரஷ்யா ஏவி இருப்பதாகவும், படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தற்போது வரை 1,100 ஏவுகணைகள் ஏவப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.