மின் கட்டணம் 500 வீதத்தால்அதிகரிக்க வாய்ப்பு!ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

0
321

இலங்கை மின்சார சபையின் பிரேரணையின் பிரகாரம் மின்சார கட்டணத்தை 500 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.

ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றிய அவர், மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

“பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை உட்கார்ந்து பார்க்க வேண்டும் அவற்றை பயன்படுத்த கூடாது அத்தகைய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது ” என அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வருடங்களாக நாட்டில் கொரோனா தொற்று மற்றும் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நிலவும் மோதல்களின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எடுத்துரைத்தார்.

எவ்வாறாயினும், மின் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு(PUCSL) முன்னதாக தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக மின்சார சபையிடமிருந்து பெறப்படும் தரவுகளை மதிப்பாய்வு செய்த பின்னரே விலை உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.