காகிதாதி பொருட்களுக்கு தட்டுப்பாடு!பரீட்சைகள் நடத்துவதில் சிக்கல்நிலை

0
409

கடதாசி உள்ளிட்ட அச்சிடலுக்கு தேவையான காகிதாதி பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் இறுதி தவணை பரீட்சைகள் நடத்துவதில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, 6, 7, 8ம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டு, 4, 9, 10, 11ம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை பரீட்சைத் திகதிகளுக்கு மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தௌிவுபடுத்தி, அனைத்து வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் விசேட கடிதமொன்றை மாகாண கல்வி பணிப்பாளர் ஶ்ரீலால் நோனிஸ் அனுப்பி வைத்துள்ளார்.

இதனடிப்படையில், மேல் மாகாண கல்வி திணைக்களத்தின் வினாத்தாள்களுக்கு அமைவாக, தவணைப் பரீட்சையை நடத்த முடியுமான அனைத்து பாடசாலைகளிலும் பரீட்சை அட்டவணைக்கமைய பரீட்சைகளை நடத்த முடியும். பரீட்சைகளை நடத்துவதில் சிக்கலை எதிர்நோக்கும் பாடசாலைகளில், வினாத்தாள்கள் மற்றும் பரீட்சை அட்டவணை என்பனவற்றை பாடசாலை மட்டத்தில் தயாரித்து பரீட்சைகளை நடத்த முடியுமென குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 04, 09, 10, 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகளை ஏப்ரல் மாத விடுமுறையின் பின்னர் நடத்தவும் மேல் மாகாண கல்விப் பணிப்பாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.