பாராளுமன்ற வளாகத்தில் 12 நாட்களில் 190 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

0
371

பாராளுமன்ற வளாகத்தில் வாரத்திற்கு ஒருமுறை எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அப்பரிசோதனைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் பாராளுமன்ற அமர்வு இடம் பெறும் மற்றும் இடம்பெறாத காலங்களிலும் வாரத்திற்கு ஒரு முறை இந்த பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அவருடன் தொடர்பில் இருந்த அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உப்புல் கலப்பகுதி தனிப்பட்ட ரீதியாக ஆன்டிஜென் மற்றும் பி சி ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு தனக்கு தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய வைத்திய அறிக்கையை படைக்கலச் சேவிதரிடம் முன்வைத்துள்ளார்.

2021 ஜனவரி 13 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரையிலும் பாராளுமன்ற வளாகத்தில் 190 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.