யாழ்.மானிப்பாய் பகுதியில் சமூக பிறழ்வு நடத்தையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 4 பேரை மானிப்பாய் பொலிஸார் தந்திரமாக அணுகி கைது செய்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பல இடங்களுக்கும் சென்று இந்த கும்பல் சமூக பிறழ்வு நடத்தையில் ஈடுபட்டுள்ளமை குறித்த தகவல் அடிப்படையில் தந்திரமாக செயற்பட்ட பொலிஸார் குறித்தகும்பலை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 45 வயதுடைய மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கோப்பாயைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணை வைத்து இந்த கலாசார சீரழிவை பணத்துக்காக முன்னெடுத்துள்ளார்.
அவர்களுக்கு உடந்தையாக முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் நெல்லியடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் செயற்பட்டுள்ளனர். அந்த நான்கு பேரும் இன்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவின் சமூக பிறழ்வு நடத்தை குறித்து தகவலறிந்த இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஊடாக கும்பலுடன் தொடர்பை ஏற்படுத்திய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அந்தக் கும்பலைச் சேர்ந்த நால்வரையும் கைது செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் சிறுமிகளை வைத்து பணம் உழைப்பதாக கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் விளக்கமறியலில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் நடமாடும் கலாசார சீரழிவு கும்பல் என்று மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.