ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

0
392

தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் தற்போது முடிவடைந்தது.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை ரிப்பன் வெட்டி தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான கல்வெட்டையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது. அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்குச் செய்த சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் ஊக்க உரைகள், உற்சாகமூட்டும் வார்த்தைகள், சிறுகதைகள், படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே அரசியல் தலைவர் ஒருவருக்கான நினைவிடத்தில் டிஜிட்டல் முறையில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.