பிரித்தானியா சுகாதார துறை அமைச்சர் மாட் ஹான்காக், உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம் என்று தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது வரை கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியே நிரந்தரம் என்பதால், தடுப்பூசி கண்டுபிடிப்பதில், தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
ஒரு சில நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துவங்கிவிட்ட நிலையில், பிரித்தானியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உருமாறிய கொரோனா வகை தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படுமா என்பது குறித்து இதுவரை தெளிவான ஆய்வு முடிவுகள் வெளியாகவில்லை.
இந்நிலையில், பிரித்தானியா சுகாதார துறை அமைச்சர் மாட் ஹான்காக் இது குறித்து கூறுகையில், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வகைகள் தடுப்பூசி முழுமையாகக் கட்டுப்படாமல் போகலாம்.
இந்த உருமாறிய கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி எவ்வளவு தூரம் பலனளிக்கும் என்று நமக்கு இதுவரை தெளிவாக தெரியவில்லை.
தென்னாப்பிரிக்க கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி வேலை செய்கிறதா என்பது குறித்த ஆய்வு தற்போது பிரித்தானியாவில் நடைபெற்று வருகிறது.
அதே சமயம் பிரித்தானியாவில், உருமாறிய கொரோனா வேகமாகப் பரவுவதால் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில், புதிய உருமாறிய கொரோனா வகைகள் பிரித்தானியா நாட்டில் நுழைவதைத் தடுக்கவே பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாம் இப்போது சில உருமாறிய கொரோனா வகைகளை கண்டறிந்துள்ளோம். ஆனால், இங்கு கண்டறியப்படாமல் பல கொரோனா வைரஸ் வகைகள் இருக்கலாம். அவைதான் மிகவும் ஆபத்தானது என்று கூறினார்.
பிரித்தானியாவில் தற்போது வரை, 50 லட்சத்திற்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 80 வயதைக் கடந்தவர்களில் நான்கில் மூன்று பங்கு மக்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.