பிரான்சிற்குள் நுழைபவர்களுக்கு இனி கடுமையான நிபந்தனைகள்! ஊரடங்கு விதியை மீறியவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்

0
363

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும் நிலையில், நாட்டிற்குள் நுழைபவர்களுக்கு கடுமையான நிபந்தனைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் இங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து பிரான்சிற்குள் நுழைவதற்கு கட்டாயமாக 72 மணிநேரத்திற்கு உட்பட்ட PCR கொரோனாப் பரிசோதனையின் எதிர்மறைப் பெறுபேறுகள் (négatif) வைத்திருத்தல் வேண்டும்.

அதுமட்டுமின்றி 7 நாட்கள் தனிமைப்படுத்தலிலும் இருத்தல் வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்குள் இருந்து பிரான்சிற்குள் வருபவர்களிற்கும், 72 மணி நேரத்திற்குள்ளான, கொரோனாப் பெறுபேற்றின் எதிர்மறைப் சான்றிதழ்கள் பெறுவது அவசியம்.ஆனால் இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்குள் இருந்து விமானம் மூலமாகவோ, அல்லது கப்பல் மூலமாகவோ பிரான்சிற்குள் நுழைபவர்களிற்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடுகள் எனவும், இரயில் அல்லது வாகனம் மூலம் பிரான்சிற்குள் நுழைபவர்களும் அடிக்கடி சோதனை செய்யப்படுவார்கள் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிபந்தனைகள் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் திகதி இருந்து பிரான்சில் ஊரடங்கு உத்தரவானது மீண்டும் பிறப்பிக்கப்பட்டது.

தேசிய அளவில் முதற்கட்டமாக 20 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு, அதன் பின் 18 மணியாக மாற்றப்பட்டது.

இதனை முறையாகக் கடைப்பிடிக்க உள்துறை அமைச்சகம் கடுமையான சோதனைகளைச் செய்யும் படி பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன் படி, கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 1.418 மில்லியன் வீதிச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஊரடங்குச் சட்டத்தினை அத்தியாவசியக் காரணங்கள் இன்றி மீறிய110 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதன் முறை மீறுபவர்களிற்கு 135 யூரோ அபராதம் எனவும், தொடர்ச்சியாக மீறுபவர்களிற்கு 3750 யூரோ வரை அபராத பணம் விதிக்கப்படுவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.