வடக்கில் புதிய இன ரீதியான எந்தவொரு குடியேற்றத்தையும் தோற்றுவிக்கும் நோக்கம் தமது அரசாங்கத்துக்கு இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் அண்மைய உரை தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இதனைக் கூறியுள்ளார்.
வட மாகாணத்தில் யுத்த நினைவு சின்னங்கள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மாத்திரமே பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் மக்களுக்கு அப்படி ஒரு பிரச்சினையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வீடுகள், காணிகள், தொழிலின்மை போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.