கொள்ளையில் ஈடுபட்ட ஹட்டன் டிப்போ முகாமையாளர் மற்றும் ஊழியர்கள் – பொலிஸில் முறைபாடு

0
465
tamil news hatton depot office involved robbery private bus

(tamil news hatton depot office involved robbery private bus)

இலங்கை போக்குவரத்துச் சபை ஹட்டன் டிப்போ முகாமையாளர் மற்றும் அந்த டிப்போவின் ஊழியர்கள் சிலர் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக நேற்று ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது.

கோட்டை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருக்கு சொந்தமாக கூறப்படுகின்ற தனியார் பஸ் ஒன்று கொழும்பிலிருந்து கண்டி வழியூடாக உடபுசல்லாவ வரை பயணத்தில் ஈடுபடுத்தி அதற்கடுத்த தினத்தில் உடபுசல்லாவையிலிருந்து நுவரெலியா, ஹட்டன் ஊடாக கொழும்பு வரை சேவையில் ஈடுபடுத்திய வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

18.07.2018 அன்று அதிகாலை 2.30 மணியளவில் டிப்போவின் முகாமையாளர் உட்பட ஊழியர்கள் சிலர் ஹட்டனில் பஸ் நிலையத்திற்கு வந்து சேவையில் ஈடுபட்டிருந்த குறித்த தனியார் பஸ் வண்டியை வீதியில் மறித்து அந்த பஸ்ஸில் பயணித்த பிரயாணிகளை போக்குவரத்து சபை பஸ்ஸில் வலுக்கட்டாயமாக ஏற்றிவிட்டு பஸ் நடத்துனரிடமிருந்த இரண்டு பவுன் தங்க நகையையும், பணத்தையும் பறித்துச் சென்றதாக சம்பந்தப்பட்ட பஸ் சாரதியும், நடத்துனரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஹட்டன் டிப்போ அதிகாரி ரோஹண சில்வாவிடம் வினவிய போது, முன்னாள் மாநகர சபை உறுப்பினருக்கு சொந்தமான பஸ் உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி சேவையில் ஈடுபட்டதாகவும், தங்களது டிப்போ மூலம் 15 வருடங்களாக அதிகாலை 3.10 மணிக்கு தினமும் சேவையில் ஈடுபடுகின்ற பஸ் வண்டியின் பயணத்தில் 10 நிமிடங்களுக்கு முன்னர் இந்த தனியார் பஸ் சேவையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த தனியார் பஸ் வண்டியை போக்குவரத்துக்கு ஈடுபடுத்தியமை தொடர்பில் மூன்று நாட்களுக்கு முன்னரே பொலிஸ் நிலையத்தில் தாம் முறையிட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த முறைப்பாட்டிற்கு பொலிஸார் இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காத காரணத்தினால் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த குறித்த தனியார் பஸ்ஸை ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ஹட்டன் குடாகம பிரதேசத்தில் வைத்து இடைமறித்து அதில் பயணித்த பயணிகளை போக்குவரத்து சபை பஸ்ஸில் ஏற்றி கொழும்புக்கான பயணத்தில் ஈடுபடுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அந்த தனியார் பஸ்ஸின் நடத்துனரது பணமோ, தங்க நகையோ கொள்ளையிடவில்லை என்றும் தெரிவித்த ரோஹண சில்வா, தங்களது முறைப்பாடு குறித்து பொலிஸார் விரைந்து செயற்பாடாவிட்டால் ஹட்டன் டிப்போ ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலைய பரிசோதகர் ஏ.எல்.எம் ஜமீலுடன் கேட்டபோது, இருதரப்பிடம் இருந்தும் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை நடத்தப்படுவதாக பதிலளித்தார்.

(tamil news hatton depot office involved robbery private bus)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites