வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பேரெழிச்சியுடன் உருவாக வேண்டும் என்று இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்தானது இலங்கை அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Vijayakala Statement LTTE
அவரின் கருத்துக்கு சிங்கள நாளேடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இன்று வெளியாகியுள்ள பல தெற்கு நாளேடுகள் விஜயகலாவின் கருத்துக்கு முதலிடம் கொடுத்துள்ளன. மேலும் அவரின் கருத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
“வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும். அப்போதுதான் மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழலாம்.
தலையால் நடந்தே ஜனாதிபதியை நாங்கள் தேர்வு செய்தோம். ஆனால் ஜனாதிபதி எங்களுக்கு என்ன செய்தார்?
தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தோம் என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும்.
எனவே வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால், எங்களுடைய பிள்ளைகள் நிம்மதியாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்ப வேண்டுமாக இருந்தால்.
தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் வடகிழக்கு மாகாணங்களில் ஓங்கவேண்டும். தமிழீழ விடுதலை புலிகளை வடகிழக்கு மாகாணங்களில் உருவாக்க வேண்டும்”, என அவர் தெரிவித்தார்.
வட மாகாணங்களில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில், அவரது கருத்துக்கு சமூகவலையமைப்புகளிலும், கண்டனம் வலுத்து வருகின்றது.