அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. Kim Trump Meeting Singapore
எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவிருக்கும் உச்ச நிலைச் சந்திப்பானது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் குறித்த சந்திப்பின் போது வட கொரிய தலைவரின் செலவீனங்களை யார் பொறுப்பேற்பர் என்ற கேள்வி எழும்பியுள்ளது.
செலவுகளை வட கொரியா பொறுப்பேற்குமா? இல்லையா என்பது பெரும் விவாதத்தை தோற்றுவித்திருந்தது.
கிம் மற்றுமன்றி அவரது அரசியல் ஆலோசகர்கள், அரச முக்கியஸ்தர்கள், படைத்தளபதிகள் என எத்தனை பேர் சிங்கப்பூர் வருவார்கள்? அவர்களது செலவீனங்கள் சிங்கப்பூர் போன்ற வாழ்க்கைச் செலவு அதிகமான நாட்டில் எவ்வாறு செலுத்தப்படுமென பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இதை முக்கிய பிரச்சினையாக எழுப்பிய அமெரிக்க வொஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை, கிம் சொகுசு அறை உள்ளிட்டவற்றை கேட்டு அடம்பிடிப்பதாகவும், அவர் கேட்கும் ஹோட்டலின் அறையொன்றின் ஒருநாள் கட்டணம் சுமார் 6 ஆயிரம் டொலர்கள் எனவும் தெரிவித்திருந்தது.
மேலும் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள வட கொரியாவால் இதனை செலுத்த முடியாதெனவும், எனவே அமெரிக்காவே இச்செலவை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகவலை அடியோடு மறுத்த அமெரிக்கா இராஜதந்திர வட்டாரம், தம்மால் இச்செலவை ஏற்க முடியாதென தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து இச்செலவை பேச்சுவார்த்தையை நடத்தும் சிங்கப்பூர் ஏற்குமா என கேள்விகள் எழுந்தன. ஆனால் சிங்கப்பூரும் இவ்விவகாரத்தில் உறுதியாக இல்லை.
இந்நிலையில் அவரது செலவினை ஏற்க அமைப்பொன்று முன் வந்துள்ளது.
வட கொரியத் தலைவர் கிம் உன்னின் ஹோட்டல் செலவை ஏற்க ஈCஆண் எனும் அணுவாயுத எதிர்ப்புப் பிரசார அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.
தான் கடந்தாண்டு பெற்ற அமைதிக்கான நொபெல் பரிசுத் தொகையின் ஒரு பகுதி அவரது ஹோட்டல் செலவுக்குப் பயன்படுத்தப்படும் என்று அமைப்பு தெரிவித்தது.
கொரியத் தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு அந்தச் செலவை ஏற்க விரும்புவதாக அது குறிப்பிட்டது. அணுவாயுதமற்ற உலகை உருவாக்குவதும் தனது நோக்கம் என்று ஈCஆண் தெரிவித்துள்ளது.
எனினும் இதுவும் இன்றளவு உறுதியாகாத நிலையில், கிம்மின் செலவு தொடர்பான கேள்வி விடையளிக்கப்படாமலேயே உள்ளது.