parties including Congress Samajwadi BJP UttarPradesh failed
இந்திய உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 4 நாடாளுமன்றம், 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மேலும், கர்நாடகாவின் ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் முடிவும் நேற்று வெளியானது. இதில் பெரும்பாலான இடங்களை காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிடித்தன. உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கைரனா, மகாராஷ்டிராவின் பால்கர் மற்றும் பண்டாரா – காண்டியா, நாகாலாந்து ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28ஆம் திகதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதேபோல நூர்பூர் (உத்தரப்பிரதேசம்), ஷாகோட் (பஞ்சாப்), ஜோகிஹட் (பிஹார்), கோமியா மற்றும் சில்லி (ஜார்க்கண்ட்), செங்கணூர் (கேரளா), அம்பட்டி (மேகாலயா), மகேஷ்தலா (மேற்கு வங்கம்), தாரலி (உத்தராகண்ட்) ஆகிய 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அதே நாளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
காங்கிரஸ் போட்டியின்றி தெரிவு
மகாராஷ்டிராவின் பலூஸ்-காதேகாவ்ன் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தரப்பில் விஸ்வஜித் காதமும் பா.ஜ.க. தரப்பில் சங்ரம்சிங் தேஷ்முக்கும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் காங்கிரஸ் வேட்பாளருக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தன. கடைசி நேரத்தில் பா.ஜ.க. தனது வேட்பாளரை வாபஸ் பெற்றது. இதனால் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வஜித் காதம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த கடந்த 12ஆம் திகதி நடந்தது. அப்போது பெங்களூரு புறநகர்ப் பகுதியான ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் ஏராளமான வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டதால் அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அந்த தொகுதிக்கும் கடந்த 28ஆம் திகதி தேர்தல் நடந்தது. இந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
ஒட்டுமொத்தமாக 4 நாடாளுமன்றம் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மகாராஷ்டிராவின் பால்கர் மக்களவைத் தொகுதி, உத்தராகண்டின் தாரலி சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. கூட்டணி கட்சி ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளை காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
கைரனா நாடாளுமன்றத் தொகுதி
உத்தரப்பிரதேசத்தின் கைரனா மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. எம்.பி. ஹுகும் சிங் காலமானதால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது. பா.ஜ.க. சார்பில் ஹுகும் சிங்கின் மகள் மிரிகங்கா போட்டியிட்டார். ராஷ்டிரிய லோக் தளம் சார்பில் தபாசம் ஹசன் களமிறங்கினார். அவருக்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தன. இதில், தபாசம் ஹசன் 4,01,464 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியை பா.ஜ.க. இழந்தது.
பால்கரில் பா.ஜ.க. வெற்றி
மகாராஷ்டிராவின் பால்கர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. எம்.பி. சிந்தாமன் வன்கா காலமானதால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது. ஆளும் பா.ஜ.க. சார்பில் காங்கிரஸ் அதிருப்தி தலைவர் ராஜேந்திர காவித் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சிவசேனா தரப்பில் மறைந்த சிந்தாமன் வன்காவின் மகன் ஸ்ரீநிவாஸ் வன்காஇ காங்கிரஸ் தரப்பில் தாமோதர் போட்டியிட்டனர். இதில் பா.ஜ.க. வேட்பாளர் ராஜேந்திர காவித் வெற்றி பெற்றார்.
மகாராஷ்டிராவின் பண்டாரா-காண்டியா மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரைவிட அதிக வாக்குகள் பெற்று தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் மதுக்கூர் குக்டே வெற்றி பெற்றார். நாகாலாந்து மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் டோக்கிகோ யாப்தோமி 5,48,749 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சட்டப்பேரவைத் தொகுதிகள்
உத்தரபிரதேசத்தின் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாமுல் ஹசன், பஞ்சாபின் ஷாகோட் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹர்தவே சிங் லாடி, பிஹாரின் ஜோகிஹட் சட்டப்பேரவைத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் ஷானவாஸ் ஆலம் வெற்றி பெற்றனர்.
ஜார்க்கண்டில் 2 சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கேரளாவின் செங்கணூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சாஜி செரியன், மேகாலயாவின் அம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மியானி டி ஷைரா, மேற்குவங்கத்தின் மகேஷ்தலா தொகுதியில் ஆளும் திரிண மூல் காங்கிரஸ் வேட்பாளர் துலால் தாஸ்,உத்தராகண்ட் தாரலி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் பா.ஜ.க. வேட்பாளர் முன்னி தேவி ஷா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கர்நாடகாவின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா 25,492 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் முனி ராஜு கவுடாவை தோற்கடித்தார்.
இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடின.
parties including Congress Samajwadi BJP UttarPradesh failed
More Tamil News
- தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு தூத்துக்குடி செல்கிறது!
- ப.சிதம்பரம் இன்று சிபிஐ முன் ஆஜர் – முன்ஜாமீன் கிடைக்குமா?
- ராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வர் ஆனேன் – கர்நாடக முதல்வர் குமாரசாமி!
- ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – சரத்குமார் பேட்டி!
- ரஜினி வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
- யார் சமூகவிரோதிகள்? – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்!
- ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா?
- கச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை!
- சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை!
Tamil News Group websites :