தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனம்

0
578
people Tamil Nadu continuing fight Vedanta Sterlite plant closure

(people Tamil Nadu continuing fight Vedanta Sterlite plant closure)

தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டு வந்த வேந்தாந்தா ஸ்டெர்லயிட் (Vedanta Sterlite) நிறுவனத்தின் தொழிற்சாலையை மூடுமாறு கோரி அமைதி வழியில் தமிழக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தின் நூறாவது நாளான நேற்று (22 மே 2018) பெருமளவிலான மக்கள் அந்த பகுதியில் திரண்டிருந்த நிலையில், தமிழக அரசின் காவற்துறையினர் அவர்கள் மீது பொறுப்பற்ற முறையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி, ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதனை சுட்டிக்காட்டிய பொது மக்களதும், பொது அமைப்புக்களதும் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காத நிலையில் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி ஜனநாயக வழியில் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அவ்வாறு அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்ற சூழலை திட்டமிட்டு உருவாக்கி கலவரத்தை அடக்குதல் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சகட்டு மேனிக்கு நடந்த தாக்குதல்களாக இல்லாமல், கலவரத்தை அடக்குகிறோம் என்ற போர்வையில் இப்போராட்டங்களை ஒழுங்கு செய்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவற்துறையினர் குறி சூட்டுத் தாக்குதல் நடத்தியதன் மூலம் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபடாமல், அமைதி வழியில் போராட்டத்தை நடத்தியவர்கள் மீது இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய தமிழக காவற்துறையின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இவ்விடயத்தில் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டிக்கொள்கிறது.

கொல்லப்பட்ட தமிழக உறவுகளின் குடும்பத்தினருக்கு எமது இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழக மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் தோழமை உணர்வுடன் தனது தார்மீக ஆதரவை வழங்கும் என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறது என்று தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

(people Tamil Nadu continuing fight Vedanta Sterlite plant closure)

More Tamil News

Tamil News Group websites :