மூன்றாவது நாடு வெறும் கற்பனை- அவுஸ்திரேலிய அமைச்சர்

0
627
Peter-Dutton

Peter-Dutton

பப்புவா நியூகினியாவின் மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள அகதிகளில், அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவதற்கு தகுதிபெறாதவர்கள் வேறொரு நாடொன்றில் குடியமர்த்தப்படுவார்கள் என்பது ‘வெறும் கற்பனையே’ என உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அமெரிக்காவில் குடியமர்த்தப்படாத மனுஸ் அகதிகள் பப்புவா நியூகினியிலேயே நிரந்தரமாக வாழவேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா-அவுஸ்திரேலியா அரசுகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, 1200 மனுஸ் அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

எனினும் அங்கு குடியமர்வதற்காக விண்ணப்பித்த அனைவரது விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதில் தெளிவற்றநிலையே காணப்படுகிறது.

இந்தப் பின்னணியில் அமெரிக்காவில் குடியமர்த்தப்படாத அகதிகளை மற்றுமொரு மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென லேபர் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறது.

எனினும் லேபர் கட்சி கூறுவது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று எனத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், குறித்த அகதிகளை குடியமர்த்துவதற்கென மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்கள் எவையும் வெற்றியளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் மனுஸ் அகதிகளை ஏற்றுக்கொள்ள நியூசிலாந்து தயார் என அறிவித்துள்ளநிலையில், அங்கு அவர்களைக் குடியமர்த்த முடியாது எனத் தெரிவித்த பீட்டர் டட்டன் அவ்வாறு குடியமர்த்தினால் ஆட்கடத்தல் வியாபாரம் மீண்டும் சூடுபிடித்துவிடும் என நியாயப்படுத்தியுள்ளார்.