எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு?

2
1053
tamilnews may day speech murugesu chandrakumar north

(tamilnews may day speech murugesu chandrakumar north)

எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கம்? எதற்காக ஆட்சி? எதற்காக அரசியல் சாசனம்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஸ்தாபகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சந்திரகுமார் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் வளாகத்தில் இன்று இடம்பெற்ற நடந்த மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் பதவிக்கு வரும்போது நல்லாட்சி அரசாங்கம் என்று தன்னைப் பிரகடனப்படுத்தக் கொண்டே வந்தது.

நல்லாட்சிக்கான கூட்டாட்சி என்று தன்னை விளம்பரப்படுத்தியது.

ஆனால், நடந்து கொண்டிருப்பது என்ன? இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன.

இந்த ஆட்சியாளர்கள் பிரகடனப்படுத்திய, வாக்குறுதி வழங்கிய எந்த விடயங்களிலும் முன்னேற்றம் எட்டவில்லை. ஆனால், விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிறது.

பொருளாதாரச் சுமை அதிகரிக்கிறது. பஞ்சமும் பட்டினியும் வேலையில்லாப் பிரச்சினையும் வளர்கிறது. அரசியல் தீர்வைப் பற்றிய பேச்சுகளைக் காணவேயில்லை.

தமிழ் மக்கள் முன்வைத்த எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

முஸ்லிம்களின் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இப்படி மக்களுக்கு எதிரான விடயங்களே இந்த அரசாங்கத்தின் மூலம் உருவாகியுள்ளன.

இந்த அரசாங்கம் தொழிலாளர்களுடைய உரிமையை மதிக்கவில்லை. தொழிலாளர்களுடைய வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கவில்லை.

இந்த நாடு மதத்துக்குக் கொடுக்கின்ற மதிப்பையும் முன்னுரிமையையும் உழைப்பாளிகளுக்குக் கொடுக்கவில்லை.

தொழிலாளர் நாளான மேதினத்தையே இன்னொரு நாளுக்கு மாற்றியுள்ளது. இது அநீதியானது. இதிலிருந்தே இந்த அரசாங்கம் உழைப்பாளிகளை எந்தளவுக்கு மதிக்கிறது என்று புரிகிறது.

உழைப்பாளிகளை மதிக்காத நாட்டில், தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணாத தேசத்தில் வளர்ச்சி இருக்காது.

வறுமையும் வீழ்ச்சியுமே இருக்கும். இலங்கை இன்று அபாயக் குழிக்குள் விழுந்து கொண்டிருக்கிறது.

இதிலிருந்து மீள்வதற்கு அமைச்சரவை மாற்றங்களைச் செய்தால் போதாது. தலையிடியை மாற்றுவதற்குப் பதிலாகத் தலையணையை மாற்றுவதே இன்றைய ஆட்சியாளர்களின் நடவடிக்கையாக இருக்கிறது. இதுதான் முன்பும் நடந்தது.

மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே அடிக்கடி அமைச்சரவை மாற்றங்களைச் செய்கிறார்கள்.

அமைச்சரவை மாற்றங்களைச் செய்தால் எல்லாமே சரியாகி விடும் என மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள். இது பொய்யானது.

இன்று நாட்டிலே வேலையில்லாப் பிரச்சினை பெரிதாகத் தலைதூக்கியுள்ளது. உற்பத்தியாளர்களுக்கு முறையான ஊக்குவிப்பில்லை. அதனால் உற்பத்தித்துறை வீழ்ச்சியடைந்துள்ளது.

உற்பத்தித்துறை வளர்ச்சியடைந்தால்தான் வேலைவாய்ப்புகள் பெருகும். இதையிட்டுச் சிந்திப்பதற்கு ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை.

கிளிநொச்சி மாவட்டத்திலே வறுமை அதிகரித்துள்ளது. தொழில்துறைகளை உருவாக்கினால்தான் இதிலிருந்து மீள முடியும்.

ஆனால், அதைப்பற்றி அதிகாரத்திலிருக்கும் எவருமே சிந்திப்பதில்லை. தேர்தலின்போது வாக்குகளை போடுவதற்கு மட்டும் மக்களைத் தேடிப்போகிறார்கள். அல்லது மரணச் சடங்குகளிற்கு மட்டும் போகிறார்கள்.

இதுவா மக்கள் பிரதிநிதிகளின் பணி? மக்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன? அவர்களுடைய தேவைகள் என்ன? பிரதேசங்களின் சவால்கள் என்ன? என்பதையெல்லாம் அறிந்து வேலை செய்ய வேணும்.

அதுவே மக்களுக்குத் தேவையானதாகும். ஆனால், இதைச் செய்வதற்கு இன்று தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இல்லை.

மாகாணசபை உறுப்பினர்களுமில்லை. தீர்மானங்களை நிறைவேற்றுவதால் மட்டும் காரியங்கள் நடந்து விடும் என்று எண்ணுவது தப்பு. மக்களுக்காக உழைக்க வேண்டும். நாம் உழைப்போம். மககளுக்காகப் பாடுபடுவோம். அப்படியான ஒரு வரலாறு எங்களுக்குண்டு எனவும் தெரிவித்தார்

ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இம் மே தினக் கூட்டமானது அமைப்பின் செயற்பாட்டாளர் சு. மனோகரன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள், விவசாய அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், மாவட்ட பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளுடன் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

(tamilnews may day speech murugesu chandrakumar north)

More Tamil News

Time Tamil News Group websites :