{ magathir said service eradicated }
மலேசியாவின், 14-ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால், கிரேப் கார் சேவை மதிப்பாய்வு செய்யப்படும் என்றுதான் தாம் கூறியதாகவும், அதனை ஒரேடியாக ஒடுக்குவதாக தாம் எங்கும் கூறவில்லை என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
கிரேப் கார் சேவையால் வாடகைக் கார் ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு, கிரேப் கார் சேவை மதிப்பாய்வு செய்யப்படும் என்றுதான் தாம் கூறியதாக மகாதீர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
“தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கும் ஊடகங்கள் அவர்களுக்கு தகுந்தார்போல் செய்திகளை திரித்து மக்களுக்கு சமர்ப்பிக்கின்றன. இந்த டுவீட்டை பகிருங்கள். கிரேப் கார் நிறுவனங்கள் மற்றும் வாடகைக் கார் நிறுவனங்கள் தேசிய முன்னணியை ஆதரிக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இந்த ஊடகங்கள் இந்தப் பொய்யான செய்தியை பகிர்ந்து வருகின்றன” என்று மகாதீர் கூறியுள்ளார்.
இது குறித்து தி ஸ்டார் இணையப் பத்திரிக்கை வெளியிட்ட தவறான செய்தியின் லின்க்–யை மகாதீர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்துள்ளார். இருந்த போதிலும், அந்த லிங்க்–யை, கிளிக் செய்கையில், அந்தச் செய்தி அப்பக்கத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
சினார் ஹரியான், நியூ ஸ்திரேட் டைம்ஸ் ஆகிய பத்திரிக்கை ஊடகங்களும் ‘மகாதீர் கிரேப் கார் சேவையை முற்றாக ஒழிக்கப் போகின்றார்’எனச் செய்தியை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.