பிளவுபட்டுள்ள சுதந்திரக் கட்சி: பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்கிறது மைத்திரி தரப்பு

0
52

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அணியுடன் பேச்சுவார்த்தை அடிப்படையிலான அணுகுமுறைக்கு தயாராக இல்லை என தெரிவித்துள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் கட்சிக்குள் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது மைத்திரி மற்றும் சந்திரிகா தலைமையில் இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது.

இரு பிரிவினரும் கட்சியின் முக்கியப் பதவிகளான பதில் தவிசாளர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளுக்கு தனித்தனியாக நியமனம் செய்துள்ளனர். அவற்றில் சில நியமனங்கள் நீதிமன்றத்தினால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பின்னணியில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கட்சியை மறுசீரமைப்பதில் ஒத்துழைக்கும் நோக்கில் சிறிசேன தலைமையிலான குழுவில் ஊழல் நடவடிக்கையில் ஈடுபடாத உறுப்பினர்கள் என கூறியவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட விருப்பம் தெரிவித்திருந்தார்.

அவ்வாறான உறுப்பினர்கள் தாம் தலைமையிலான குழுவில் இணைந்து கொள்ள வரவேற்கப்படுவதாகவும் தற்போது நெருக்கடி நிலையிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறிசேன தலைமையிலான குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச அவ்வாறான எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.