முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் முகவரியற்ற தமிழினமும்

0
384

சர்வதேச சதி வலைகளின் சகுனித்தனத்தால் தோற்கடிக்கப்பட்டது தேசிய விடுதலைப் போராட்டம் அல்ல. ஆயுதப் போராட்டம்தான்.

விடுதலைப் போராட்டம் பல்வேறு காலகட்டங்களில், பல வடிவங்களில், பல தந்திரோபாயங்களின் அடிப்படையில் இலக்கு நோக்கி வீறு கொண்ட பயணமாக அமைந்திருந்தது.

ஓர் இனம் தன்னைத்தான் ஆள நினைப்பதும், ஆள முனைவதும் எவ்வகையிலும் தவறானது அல்ல. உணர்வுகளை அடக்குமுறைக்குள்ளாக்குகின்ற போது எழும் பெருவெடிப்பின் எழுச்சியே கிளர்ந்தெழச் செய்யும்.

உலக ஜீவராசிகள் யாவுக்கும் இது பொது விதியே. கடந்த எழுபது ஆண்டுகளாக உரிமைகள் மறுக்கப்பட்டு வாடகை வீட்டில் குடியிருக்கும் மனநிலையுடன் சதா வெக்கித் தவிக்கும் இனக் குழுமமாகவே தமிழினம் அல்லோலப்படுகிறது.

திட்டமிட்டு, குற்றமனத்துடன், இந்திய அரசின் ஆசீர்வாதத்துடன், உலகின் அனுசரனையுடன், நடந்த முள்ளிவாய்க்கால் பேரழிப்பு என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித இனப்படுகொலை ஆகும்.

மிருகவதைக்குக் கூட இந்த உலகம் வலிமையான உரிமை சார் சட்டங்களை உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் மனித இனப்படுகொலைக்கு உலகம் பரி நிர்வாணமாக நின்று, சங்கு ஊதி, சாவுமணி அடித்ததே..!

உலகின் மனோநிலை என்பது நவீன ஹிட்லரிஸமே. வெறும் கையாலாகாத வெற்று அறிக்கைகளும், மனித உரிமைகள் எனும் போலிக் கவசமும் இந்த உலகில் ஜாடை காட்டி ஏமாற்றுகின்றன.

எல்லாமே கோப்பரேட் யுகமாக சென்றுவிட்டது. நிறவெறியாலும், இன வெறியாலும், மதவெறியாலும் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட எந்த நாட்டையுமோ, எந்த இனக் குழுமத்தையுமோ இதுவரை இந்த உலகம் காக்க வில்லை.

மாறாக, பயனற்ற – நடைமுறைச் சாத்தியமற்ற – கனிவு வார்த்தைகளை தத்தமது பிராந்திய நலன்களுக்குள் கவசங்களாக திரையிட்டு ஒளிந்து கொண்டு கூறிக் கொண்டிருந்தது.

நீதியை நீக்கம் செய்ய முனையும் வல்லமையற்றோர்களின் போலி வார்த்தைகள் அவை. அதனால் இறுதிவரை நம்பிய தமிழினம் மிகப்பெரிய இனப்படுகொலையையே சந்தித்தது. தற்போது அந்த இனப்படுகொலைக் கொடூரம் நடந்து பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் எந்த மாற்றமும் நிகழவில்லை.

தருஸ்மன் அறிக்கை, கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, பரணகம ஆணைக்குழு அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவை எவற்றாலும் இதுவரை ஒரு துரும்பை கூட நகர்த்த முடியவில்லை.

நிலைமாறுகால நீதிப் பொறிமுறையால் கூட எதுவும் நிகழவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டங்கள் கரைந்து காலாவதியாகும் நிலையில் உள்ளன. சங்கங்களுக்குள்ளும் பல சங்கதிகள் உருவாகிவிட்டன.

புலம்பெயர் அமைப்புகளும் உருப்படியாக எதையும் முன்னெடுக்கவில்லை. அவர்களுக்குள்ளும் பிளவுகள் ஏராளம். இங்கே ஈழத்தில் தமக்கு இஷ்டமானவர்களை வைத்து ரிமோட் கண்ட்ரோல் வேலையை பார்க்கிறார்கள்.

அதனால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. எந்த மாற்றமும் நிகழப் போவதுமில்லை. தமிழ்த்தேசியம் எனும் வாக்கு கவர்ச்சி அரசியல் பேசும் தேர்தல் மைய அரசியல்வாதிகளால் நிர்ணயிக்கப்பட்ட எந்தக் கட்டமைப்பையும் உருவாக்க முடியவில்லை. உருவாக்கும் வல்லமை வெளிப்படவில்லை.

ஆகவே எல்லாம் திரிசங்கு நிலையில் திண்டாடுகின்றன. தமிழர் அரசியலும் உரிமை சார் உணர்ச்சி நிகழ்வுகளும், இன அழிப்புக்குரிய பொறுப்புக் கூறல் கட்டமைப்புச் செயற்றிட்டத்தை வடிவமிட்டு நகர்த்தக்கூடிய எந்த வல்லாளுமையுள்ள – தீர்க்கதரிசனமுடைய – தத்துவார்த்த தலைமைத்துவமும் இதுவரை வெளிப்படவில்லை.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வை நடத்த முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு நினைவுத் தூபி அமைக்கிறோம் என வடக்கு மாகாண சபை ஒரு குழு அமைத்தது. அந்தக் குழு எதுவும் செய்யாமல் மாகாண சபையோடு கலைந்துபோனது.

அன்றைய முதல்வராக இருந்த இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனிடம் பலராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நினைவுத் தூபி, நினைவு நிகழ்வை நடத்துவதற்கான பொதுக்கட்டமைப்பு ஆகியன.

இதில் எதனையும் முன்னெடுக்கவில்லை. மாகாண அரசை கொண்டே இந்த விடயங்களை மிக இலகுவாக நகர்த்தி இருக்கலாம். விக்னேஸ்வரன் வலி புரியாதவர்.

ஆகவே மாகாண சபையும் இன அழிப்பு செயற்றிட்ட விடயத்தில் மாத்திரமன்றி, பொதுவாகவே பயனற்று போனதுடன், இந்த விடயங்களும் செயலின்றி நலிவடைந்து விட்டன.

திட்டமிட்ட இனப்படுகொலை நிகழ்வை வழிநடத்த, சகலரின் ஒத்துழைப்புடனும் குறைந்தபட்சம் வடக்குக் கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் உள்ளடக்கி, ஒரு பொதுக் கட்டமைப்பை அரசியலுக்கு அப்பால் உருவாக்குவதில் என்ன பிரச்சினை எழுந்து விடப் போகிறது? இவ்விடயத்தை, ஒரு சில மத குருக்கள் தங்கள் உள்ளங்கைப் பிடிக்குள் இறுகப் பற்றி வைத்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரகடனம் என்ற போர்வையில் ஓர் அறிக்கை வருகிறது. அதை வாசிப்பதற்கு இன்னொரு மதகுரு. இவை கேலிக்கூத்தின் உச்சமாக அரங்கேறுகின்றன. எதற்காக இவர்கள் பொதுக் கட்டமைப்பை விரும்புகிறார்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தத் தயங்குகிறார்கள்.

இதற்கு ஆதரவாக சில யாழ் நகரமையவாதிகளும், ரிமோட் கண்ட்ரோலில் உள்ள உணர்ச்சிவச பல்கலைக்கழக மாணவர்களும், மேலும் சில புலம்பெயர் நலன் சார் அமைப்புக்களும், இந்த நிகழ்வை பொதுமைப் படுத்தவோ, மக்கள் மயப்படுத்தவோ, பரவலாக்கவோ, அடுத்த சந்ததியிடம் கையளிக்கும் நோக்கை விரிவுபடுத்தவோ முன் வருகிறார்கள் இல்லை.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான செயல்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் அவர்கள் கடந்த காலத்தில் பல முயற்சி எடுத்து சில கூட்டங்களையும் நடத்தினார்.

யாழிலும், முல்லைதீவிலும் உள்ள சில அதி மேதாவிகள் அவரை அசிங்கப்படுத்தி விரட்டி விட்டனர். தற்போது ஏகன் அனேகன் என தங்களுக்கு தாங்களே தவில் வாசிக்கிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகளை விஞ்சி விடுவார்கள் போல் உள்ளது.

இனப்படுகொலை நினைவேந்தல் ஒரு மாவட்ட நிகழ்வாக சிலரின் எண்ணங்களுக்குள் சுருங்கிவிட வைப்பதும் இனப்படுகொலை செய்யப்பட்ட இனக்குழுமத்தின் மீதான இன்னொரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையாகும்.

அதை இவர்கள் புரிய மறுப்பது ஏன்? இனி, ஒவ்வொரு கட்சியினதும் சில குழுக்களினதும் ஆதிக்கமும் மேலெழும், யாவற்றையும் தடுக்க வேண்டும் என்றால் வலிமையான பொதுக் கட்டமைப்பு அவசியமாகும்.

பதினைந்து ஆண்டுகள் கடந்தும் இன்னும் இனப்படுகொலை நினைவு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு பொது கட்டமைப்பை உருவாக்க வல்லமை இல்லாத இனம், இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோருவதும் நம்புவதும் கேலிக்கூத்தானவை.

உலகம் எம்மை எப்படி நோக்கும் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத முட்டாள் தமிழர்களாக நாம் இருக்கிறோம் என்பதே மிகப்பெரிய மனவேதனை.

தமிழர்களில் ஆழமான கருத்து புலமையுள்ள ஒரு புத்திசாலி கூட இல்லையா என அண்மையில் ஒரு சிங்கள அரசியல்வாதி விளித்திருந்தார்.

சமாதான நீதிவான்கள் நிலையில் யாழில் தடக்கி விழுந்தால் பேராசிரியரும் கலாநிதிகளும்தான். இவர்களால் தமிழினம் அடைந்த பயன் என்ன? எல்லாம் பெயருக்கு ஆசிரியராகியது தான் மிச்சம்.

ஆகவே ஒரு தூய விடுதலைப் போராட்டத்தின் நீட்சியை குறுகிய எல்லைக்குள் முடக்கி, சின்னாபின்னம் ஆக்குவதை இனியாவது தவிருங்கள். எல்லைகளை வியாபித்துக்கொள்ளுங்கள்.

அதை தொல்லைகள் என நினைக்காதீர்கள். திட்டமிட்ட இன அழிப்பை மதங்களுக்குள் சுருக்காதீர்கள். மதங்களால் ஒருபோதும் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது. மதமே புரட்சிக்கு எதிரான அடிப்படை வாதம் கொண்டது.

ஆகவே விடுதலை தீயை மதச்சாயம் ஊற்றி அணைக்க முனையாதீர்கள். பிரகாசிக்கட்டும் முள்ளிவாய்க்காலின் இன அழிப்பு சாட்சியம். உலகம் முழுக்க வியாபிக்க எல்லோரும் ஒத்துழையுங்கள்.

ஆக்கபூர்வமாக உழையுங்கள். விடுதலை தீயை அணையாமால் பிரகாசித்துப் பாதுகாப்போம். பேதங்களைக் கடந்து, அநீதிகளை எதிர்க்க, நீதியைப் பெற்றுக்கொள்ள அனைவரும் எழுந்து வாருங்கள் – ஒரு தேசமாக இணைவோம்.