தேஷபந்துவின் நியமனத்துக்கு எதிரான கத்தோலிக்க திருச்பையின் மனுவுக்கு எதிர்ப்பு: ஆதரவாக களமிறங்கிய மகா சங்கத்தினர்

0
100

பதில் பொலிஸ்மா அதிபராக பணியாற்றிவந்த தேஷபந்து தென்னக்கோன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இலங்கைத் தீவின் 36ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கும் கடும் எதிர்ப்புகள் வெளியாகி வருகின்றன.

அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரத்தை உரிய வகையில் பெறாதே தேஷபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது ‘எக்ஸ்’ தளத்தில் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.

‘யுக்திய’ நடவடிக்கை தொடர தேஷபந்து அவசியம்

இந்த நிலையில், தேஷபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கத்தோலிக்க திருப்சபை, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட 7 தரப்பினர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

மனுக்கள் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது. தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்கு எதிராகவும் தேஷபந்துவின் நியமனத்துக்கு ஆதரவாகவும் மகா சங்கரத்தினர் களமிறங்கியுள்ளனர்.

போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு “யுக்திய“ நடவடிக்கை வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டதன் பின்னணியில் இவ்வாறான மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்பது மகா சங்கத்தினரின் நிலைப்பாடாக உள்ளது.

ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியவர்கள் யார்?

யுக்திய நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தேஷபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பிரசன்னமாகியிருப்பது மிகவும் அவசியமானது என மகா சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் தலையீட்டுடன் நாடளாவிய ரீதியில் பாதாள உலக செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றதாகவும் மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபை அனுநாயக்கர் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்தத் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் கோட்டாபிட்டிய ராகுல அனுனாஹிமி,

ருஹுனு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் அக்குரட்டியே நந்த தேரர், களனிப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதம் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் இந்துரகரே தம்மரதன தேரர்,

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷமோபாலி மகா நிகாயாவின் மல்வத்து பிரிவின் மேல் மாகாணத்தின் நீதித்துறை சங்கநாயக்கர் பேராசிரியர் அகலகட சிறி சுமண நஹிமி,

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், களனி நாகாநந்தா சர்வதேச பௌத்த கல்வி நிறுவகத்தின் உபவேந்தர், தைவானின் பிரதம சங்கநாயகர் போதகம சந்திம நஹிமி,

மூத்த போதகரான உடுவே தம்மாலோக தேரர் ஆகியோர் பொலிஸ்மா அதிபருக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.