ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்டம் இன்னும் 11 மாதங்களில் முடிந்துவிடும் – நளிந்த ஜயதிஸ்ஸ

0
210

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்த மரங்களை கொத்தி கொத்தி சென்றாலும் ஜனாதிபதி தேர்தல் என்ற வாழை மரத்தை கொத்தி சிக்கிக்கொள்வார் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து மிகவும் அச்சமடைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப்பிரிவு ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்கும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறது.

இன்னும் 11 ஆண்டுகள் மாத்திரமே ரணில் விக்ரமசிங்கவால் தன்னிச்சையாக செயற்பட முடியும். அரசியலமைப்புச்சட்டத்திற்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். பதவிக்காலம் முடியும் ஒரு மாதத்திற்கு குறையாத இரண்டு மாதங்களுக்கு மேற்படாத காலத்திற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதி பதவிக்காலத்திற்கு 5 ஆண்டு பூர்த்தியாகின்றது. இதனால் அடுத்தாண்டு செம்படம்பர் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்திலும் சர்வஜன வாக்கெடுப்பிலும் யோசனையை ஒன்றை நிறைவேற்ற வேண்டும். அது நடக்காது.

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்தாத ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலுக்கு பதிலாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவாரா?.

அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஜனாதிபதி தேர்தலை நடத்தியதாக வேண்டும். தேர்தல் ஆணைக்குழு அடுத்தாண்டு ஜூலை அல்லது ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும். இதனால் இன்னும் 11 மாதங்களில் கட்டாயம் ரணில் விக்ரமசிங்கவின் விளையாட்டுகள் முடிவுக்கு வரும்.

நாட்டில் தற்போது இரண்டு அதிகார மையங்களே இருக்கின்றன. ஒன்று ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நாட்டை வங்குரோத்து அடைய செய்த மையம்.

மற்றைய மையம் வங்குரோத்து அடைந்த நாட்டை கட்டியெழுப்ப வரும் அனுர திஸாநாயக்க தலைமையிலான மையம் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.