சக ஆசிரியையின் தாலிக்கொடியை களவாடிய ஆசிரியை கைது..

0
213

புத்தளம் – உடப்பு பகுதியில் சக ஆசிரியை ஒருவரின் தாலிக் கொடியை களவாடியதாக மற்றுமொரு ஆசிரியையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுமார் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தாலிக் கொடியொன்றே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

தாலிக்கொடியை அணிந்திருந்த ஆசிரியையின் கழுத்தில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தாலிக்கொடியை கழற்றி பணப்பையில் வைத்து விட்டு கற்பிக்கச் சென்று விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர் அழைத்த காரணத்தினால் வகுப்பறையை விட்டு வெளியே சென்ற ஆசிரியை, மீண்டும் வகுப்பறைக்கு சென்று பணப்பையில் வைத்த தாலிக்கொடியை தேடியுள்ளார். இதன்போது பணப்பையில் தாலிக்கொடி இல்லை என்பதனை அறிந்துகொண்ட ஆசிரியை இது குறித்து அதிபருக்கு அறிவித்துள்ளார்.

அதிபர் வகுப்பறையில் மாணவர்களிடம் விசாரணை செய்த போது, சக ஆசிரியை ஒருவர் பணப்பையை திறந்து தாலிக்கொடியை எடுத்துச் சென்றார் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிபர் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சந்கேதத்திற்கிடமான ஆசிரியையிடம் பொலிஸார் நீண்ட விசாரணை நடத்திய போது, தாலிக்கொடி மற்றும் ஒர் தங்க சங்கலி என்பனவற்றை தாம் களவாடியாக ஒப்புக்கொண்டுள்ளார். பாடசாலை வளாகத்தில் ஒர் இடத்தில் கைகளினாலேயே குழி பறித்து அதில் இந்த ஆபரணங்களை மறைத்து வைத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர் சந்தேகத்திற்குரிய ஆசிரியை கைது செய்த பொலிஸார், ஆசிரியையை புத்தளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.