சீரற்ற காலநிலை; 08 பேர் பலி; 38046 பேர் பாதிப்பு

0
843
Bad weather 08 killed 38046 people affected

(Bad weather 08 killed 38046 people affected)
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 08 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன், இந்த அனர்த்தங்களால் இதுவரை ஏழு பேர் காயமடைந்துள்ளதுடன், பலர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தொடர் மழை காரணமாக 19 மாவட்டங்களில் இருந்து 38 ஆயிரத்து 46 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறாயிரத்து 90 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக தொள்ளாயிரத்து 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

19 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மூன்று வர்த்தக நிலையங்களும், பிரதான ஐந்து உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் இடங்களும் சீரற்ற காலநிலையினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையினால் பிரதான ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

களனி கங்கை, களுகங்கை, நில்வளா கங்கை, மகாவலி கங்கை என்பனவற்றின் நீர் அதிகரித்துள்ளதோடு, மஹாஓய, அத்தனகல்லஓய என்பனவற்றிற்கு அருகில் உள்ள தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

நேற்றைய தினம் அதிகரித்த நில்வளா கங்கை மற்றும் அத்தனகலுஒயா ஆகியவற்றின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், சில நாட்களுக்கு நீர்நிலைகளை பயன்படுத்துவது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்த திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

இதேவேளை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ளது.

இதேவேளை, ஹெமில்டன் கால்வாய் பெருக்கெடுப்பதன் காரணமாக நாத்தாண்டிய – தும்மோதர பகுதியில் 16 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்பதற்கான பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ள அதேவேளை, தெதுருஒயா நீர்தேக்கத்தின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்கனை மற்றும் தப்போவ ஆகிய நீர்நிலைகளின் நீர்மட்டம் பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா பிரதேசத்திற்குட்பட்ட 12 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 53 குடும்பங்களை சேர்ந்த 260 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட லொக்கில் பிரதேசத்தில் உள்ள 12 இற்கும் மேற்பட்ட குடியிருப்புகளினுள் வெள்ளம் புகுந்துள்ளது.

நேற்று பெய்த கடும் மழைக்காரணமாக இந்த பகுதியின் ஊடாக ஓடும் மகாவலி ஆற்றின் கிளை ஆறான கொட்டகலைஓயா பெருக்கெடுத்தமையாலே இந்த வீடுகளினுள் வெள்ளம் புகுந்துள்ளது.

இதேவேளை, கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததனால் நோர்வூட் பிரதேசத்தில் உள்ள 46 வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

அத்தோடு, பாதிப்பு ஏற்பட்டிருந்த ஹட்டன் எபோட்சிலிக்கிடையேயான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Bad weather 08 killed 38046 people affected