புலிகளின் கொள்கைகளை தோல்வியுறச் செய்வதற்கே முயற்சித்து வருகிறேன் : ஜனாதிபதி ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை இதோ!

0
1173
8th Parliament second session President Sirisena speech

( 8th Parliament second session President Sirisena speech)
எவ்வாறான விமர்சனங்கள் எழுந்த போதிலும், வடக்கு – கிழக்கு மக்களின் பொறுமையிழப்பை நிரந்தரமாகச் சமரசப்படுத்த வேண்டுமாயின், மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தல் வேண்டுமென்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளைத் தோற்கடித்த போதிலும், அவர்களின் கொள்கையை முழுமையாகத் தோல்வியுறச் செய்வதற்கு, இன்னும் முடியாது போயிருக்கின்றது என்றும் கடந்த மூன்றரை ஆண்டுகளாக, சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைப் பெற்று, அந்தக் கொள்கையைத் தோல்வியுறச் செய்வதற்கே தான் முயன்று வந்ததாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு, நேற்று (08) பிற்பகல் 2.15க்கு கூடியது. இதன்போது, ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றியபோதே, இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், அரசாங்கத்தின் புதிய பயணப்பாதைக்குத் தேவைப்படும் விடயங்கள் தொடர்பில் கவனத்தைச் செலுத்தி, நாடு முகங்கொடுத்திருக்கும் 10 ட்ரில்லியன் ரூபாய்க்கும் அதிகமான கடனை மக்களின் மீது சுமத்தாமல், முகாமைத்துவம் செய்வது கட்டாயமாகவுள்ளது என்றார்.

“வறுமையில் வாடும் மக்களை, வறுமையிலிருந்து மீட்டெடுப்பது, அரச சேவையை முறைமைப்படுத்துவதுடன் வினைத்திறனானதாகவும் மாற்றுவதுடன், நெகிழ்வுத் தன்மையுடன் மக்களுக்கு சேவையை வழங்குவதற்கான பணிகளை வலுப்படுத்துவதற்குத் தேவைப்படும் கொள்கைகளை உருவாக்குவது, செயல் உபாயங்களை கண்டறிந்து முகாமைத்துவ முடிவுகளை எடுப்பதும் இங்கு முதன்மையாகும்.

“படித்த இளம் சமூகத்தினரும் மக்களும் விரும்பும் துரித வளர்ச்சிக்காக, நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதோடு, அதை எதிர்காலத்துக்காகத் தள்ளிவைக்க முடியாது. சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, பறங்கிய இனத்தவர் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு, தங்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்புகளை நாம் உறுதிசெய்ய வேண்டும். அது இலங்கையர் என்ற முறையிலேயாகும்.

“துரித பொருளாதார வளர்ச்சிக்காக அரச மற்றும் தனியார் துறையின் செயற்பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளல், உற்பத்திப் பெருக்கத்தையும் போட்டித் தன்மையையும் அதிகரித்தல், நேரடி வெளிநாட்டு முதலீடுகளையும் ஏற்றுமதி பொருளாதார வளர்ச்சியையும் நோக்காக கொண்ட வள முகாமைத்துவம், அரச நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல் அவற்றுள் முதன்மையாகும்.

“மேற்குறிப்பிட்ட அனைத்துச் சவால்களையும் வெற்றிகொள்ளச் செயற்படுவது என்பதன் அர்த்தம், இலங்கையை அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறும் நாடாக உருவாக்கும் எமது முதல் கொள்கையை நிறைவேற்றிக்கொள்வதேயாகும்.

“எமது இரண்டாவது கொள்கை, அரசியல் ஸ்திரத்தன்மைக்காக, தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை பெற்றுக் கொள்வதாகும். ஊழல் மற்றும் மோசடிகளற்ற செயல்வினைமிக்க அரச இயந்திரத்தை உருவாக்குவது, மூன்றாவது குறிக்கோளாகும். எனது ஆட்சிக்காலத்துக்குள் மேற்குறிப்பிட்ட வெற்றிகளைப் பெறுவதே எனது ஒரே எண்ணமாகும்.

“இன்று சகல இலங்கை மக்களும் சௌபாக்கியத்தின் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளவே எதிர்பார்க்கின்றனர். இலஞ்சம், ஊழல், மோசடி, வீண்விரயம் என்பவற்றுக்கு எதிராக செயற்படுதல், தேசத்தின் எதிர்காலத்துக்கான தற்பாதுகாப்பாகும்.

“தற்போது எமது நாடு பல்வேறு கட்சிகளினதும் குழுக்களினதும் அரசியல் பலத்தை உரசிப் பார்ப்பதற்குப் பொருத்தமானவொரு சூழ்நிலையில் காணப்படவில்லை. நாட்டின் முன் காணப்படும் சவால்களை, ஒன்றிணைந்து வெற்றிகொள்ள வேண்டிய நிலையிலேயே காணப்படுகின்றது என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

“இதன்போது, அந்த முன்னுரிமைகளை யதார்த்தமாக்கிக் கொள்வதற்கு, முதலில் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையே காணப்படும் அதிகார மோதல்களையும்; இரண்டாவதாக அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காணப்படும் அதிகாரப் போராட்டங்களையும் சமநிலைப்படுத்த வேண்டும். தற்போது காணப்படும் சகலவித அதிகார மோதல்களாலும், மக்களின் எதிர்பார்ப்புகளே பாதிப்புக்குஉள்ளாகின்றன.

“மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், உண்மையான மக்கள் நேயச் செயற்றிட்டங்களின் நிபந்தனைகளாக, பின்வரும் 15 விடயங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

1. மக்களின் பொருளாதார சுபீட்சத்தை உறுதிப்படுத்தல்.

2. வறுமையை இல்லாதொழித்தல்

3. இளைஞர்களுக்கு புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தல்

4. அரச சேவையாளர்களுக்குத் திருப்திகரமான சூழலை ஏற்படுத்தல்

5. பொலிஸ் மற்றும் முப்படையினரின் தன்னம்பிக்கையையும் உயர் குறிக்கோள்களையும் உறுதிப்படுத்தல்

6. சட்டம், அதிகாரம், ஜனநாயகம், மனித உரிமைகள், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றைச் சமூகத்தில் உறுதி செய்தல்

7. தமிழ் மக்களின் சம உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ளல்

8. முஸ்லிம் மக்களின் நலன் மற்றும் சமூக, கலாசார தேவைகளை உறுதிசெய்தல்

9. மலையகத் தமிழ் மக்களின் பொருளாதார, சமூக நிலையை மேம்படுத்தல்

10. நாட்டின் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் கலாசார உரிமைகளைப் பலப்படுத்தி, உறுதி செய்து, தேசத்தின் அடையாளத்தை வலுப்படுத்தல்.

11. பெண்களைப் பலப்படுத்துதலும் அவர்களது நேரடி பங்களிப்பும்

12. சமூகத்திலுள்ள விசேட தேவைகளை உடைய பிரஜைகள் தொடர்பாக உணர்வுபூர்வமாகச் செயற்படல்

13. நாட்டின் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும், தேசிய வளங்களை எதிர்காலச் சந்தியினருக்கும் பெற்றுத்தரக்கூடிய பேண்தகு அபிவிருத்தியை உறுதிசெய்தல்

14. சமய நம்பிக்கைகள், எமது மரவுரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில், சகல சமயப் பெரியார்களையும் மத குருமார்களையும் மகா சங்கத்தினரையும் பேண்தகு முறையில் போஷித்தல்

15. அரசியல் பலப் பரீட்சைக்கு அப்பால் சென்று, நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக சகல இன, மத, அரசியல், கட்சிகளை ஒன்றிணைத்துக் கட்டியெழுப்பப்படும் தேசிய பேண்தகு அபிவிருத்தி இலக்கை உருவாக்குதல்

“மேற்கூறப்பட்ட நிபந்தனைகளின் கீழ் செயற்படும்போது, பூரண மற்றும் நுண் அபிவிருத்தி உபாய மார்க்கங்களூடாகச் செயற்பட வேண்டியதுடன், அவற்றின் வெற்றிக்காக கட்டமைக்கப்பட்ட மாற்றங்களும் அத்தியாவசியமாகும் எனக் குறிப்பிட வேண்டும்.

“இந்த அரசாங்கம் தொடர்பாக, பல்வேறு தரப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றனர். அவ்வனைத்து விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரசாங்கம் என்ற வகையில் நாம் மிகுந்த நேர்மையோடு அவை தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், அது தொடர்பாக நாம் சுய விமர்சனத்திலும் ஈடுபட்டுள்ளோம் என்பதைத் தெரிவிக்க வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை, நாம் ஏற்கனவே உறுதி செய்துள்ளோம். ஆயினும் இன்னும் சுதந்திரமாக உள்ள பாரியளவிலான மோசடியாளர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமை தொடர்பாக விமர்சனங்கள் காணப்படுகின்றன.

“ஊழலை முற்றாக இல்லாதொழித்து சகல ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்துதலே, எமது ஏகோபித்த எதிர்பார்ப்பாகும். அதுவே ஒட்டுமொத்த மக்களின் பிரார்த்தனையுமாகும்.

“நாட்டுக்கு எதிராக உள்ள சவால்களைக் கருத்திற்கொள்ளும்போது, சகல கட்சிகளும் ஒன்றிணைந்து, நாட்டுக்காக முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். பாரியதொரு கடன் சுமை, எம் முன்னே உள்ளது. பயனற்ற வீண்விரயங்கள் செய்யப்பட்ட யுகத்தின் இழப்புகளையும், நாம் நீக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் நாடு மீண்டும் முன்னேற்றமடைவதற்குள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவே என்பதைக் கருத்திற்கொண்டு, சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

“வைராக்கியம், குரோதம் நிறைந்த நாட்டில், ஆட்சி மாற்றங்களின்போது இடம்பெறும் பாரியளவிலான அரசியல் பழிவாங்கல்கள் இல்லாத, தோல்வியடைந்தவரும் வெற்றியாளரும் அபிமானத்தோடு வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டியதும், இன்றைய அரசியல் கடமையாகுமென நான் கருதுகின்றேன்.

“நிலையான நாட்டின் அடித்தளம், தேசிய நல்லிணக்கமே ஆகும். உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை இயற்றத்தக்க கட்டமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும். அந்த நோக்கை வெற்றிகொள்வதற்கு, தற்போது செயலில் இருந்துவரும் மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவது, காலத்தின் தேவையாகும் என நான் நம்புகிறேன்.

“யுத்தத்தின் பின்னரான நிலைமைகளைக் கையாள்வதென்பது, மிகுந்த சவாலாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற சமயம், அச்சவாலுக்கான விடைதேடும் காரியம் ஏழு ஆண்டுகளால் தாமதமாகி இருந்ததால், அச்சவால் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு உள்ளாகியிருந்தது. மூன்று தசாப்தங்களாக சமூகத்தில் வேரூன்றியிருந்த போர் மனநிலையை அகற்றி, சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு, இன்னும் எம்மால் பாரிய வேலைகளைச் செய்யவேண்டி இருக்கின்றது. ஓர் அரசாங்கத்தால் மாத்திரம் அதனைச் செய்வது கடினமாகும். அதற்கு, சமூகத்தின் அனைத்து தரப்புகளினதும் நேரடிப் பங்களிப்புக் கட்டாயமாகத் தேவைப்படுகின்றது. அதனால் அந்த நோக்கை அடைவதற்காக, நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுவோமென அனைத்து தரப்புகளுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்” என்று, ஜனாதிபதி மேலும் கூறினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை