வரலாறு கற்றுத்தந்த பாடங்களை மே தினம் நினைவூட்டுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

8
945
President Maithripala Sirisena May Day Greeting message tamilnews

 

வரலாறு கற்றுத்தந்த பாடங்களை மே தினம் நினைவூட்டுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மே தினத்தினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

‘மனித நாகரிகமானது, இயற்கையின் சவால்களைக் கண்டு அஞ்சாத மனித உழைப்பினாலேயே உருவாக்கப்பட்டது.

ஒரு சிறு பிரிவினர் அல்லது வகுப்பினரின் பிடிக்குள் சிக்கியிருந்த மனித நாகரீகத்தின் அந்த மகத்தான படைப்புக்கள், சுதந்திரத்திற்கான தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் பலத்தினாலேயே பொது மனித உரிமைகளாக மாற்றம் பெற்றன.

இன்று நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திர வாழ்க்கையானது, அந்த உன்னத மனிதர்களின் குருதியினாலேயே உருவானது என்பதை நாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதையே சர்வதேச தொழிலாளர் தினம் எமக்கு வலியுறுத்துகின்றது.

மூன்று தசாப்த கால இனப் பிரச்சினையிலிருந்தும் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தான்தோன்றித்தனமான ஆட்சியிலிருந்தும் விடுதலைப் பெற்று பலமானதொரு ஜனநாயக தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பாதையில் பயணிக்கும் நாம் மறந்துவிடக் கூடாத வகையில் வரலாறு நமக்கு கற்றுத்தந்த இந்த பாடங்களையே இந்த மே தினம் எமக்கு மீண்டும் நினைவூட்டுகின்றது.

இலங்கை, உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகள் தொடர்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் உடன்படிக்கைகளுடனும் கோட்பாடுகளுடனும் இணங்கிச் செயற்படும் ஒரு நாடாகும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீடுகளைப் பெற்றுக் கொடுத்தல், தனியார் துறையினரின் அடிப்படை சம்பள எல்லையை சட்டரீதியாக உறுதி செய்தல்,

வீட்டுத் தொழிலாளர்களை தொழிற் சட்டத்தின் கீழ் கொண்டுவருதல் மற்றும் பிரசவ விடுமுறை தொடர்பில் நிலவிவரும் வேறுபாடுகளை இல்லாது செய்தல் போன்ற விடயங்களில் அத்தகைய சர்வதேச உடன்படிக்கைகளுக்கு மதிப்பளித்து,

உழைப்பிற்கு உரிய கௌரவத்தினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே நாம் செயற்பட்டு வருவதாக அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :