ஃபிஃபா உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில், “சீ“ குழுவின் நேற்றைய போட்டியில் ஆர்ஜன்டீனா அணியை சவுதி அரேபியா அணி வீழ்த்தியுள்ளது.
இந்தப் போட்டியில் சவுதி அரேபியா அணி 2 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் ஆர்ஜண்டீனா அணியை வீழ்த்தியது.

இதற்கமைய, உலக கிண்ண கால்பந்து தொடரில் முதன்முறையாக ஆர்ஜண்டீனா அணி, சவுதி அரேபியாவிடம் தோல்வியடைந்துள்ளது.
சவூதி அரேபியாவின் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, அதனைக் கொண்டாடும் வகையில், இன்று (23) சவுதி அரேபியாவில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையானது பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கிண்ண வெற்றிக்குப் பிறகு பொது விடுமுறை அறிவிக்கப்படுவது இது முதல் முறை அல்ல.

1990ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட தொடரின் தொடக்க ஆட்டத்தில் அர்ஜென்டினாவுக்கு எதிராக கேமரூனின் அபாரமான ஆட்டம் – உதைப்பந்தாட்ட வரலாற்றில் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாக அடிக்கடி குறிப்பிடப்படுவதோடு, கெமரூனில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
