வடக்கு மாகாண சபையை கோமாளிகளின் கூடாரம், மாகாண சபைக்கு அதிகாரம் கோரி ஒரு வழக்கேனும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவில்லை, நானாக இருந்தால் 200க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்திருப்பேன்’’ என முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார் Varatharaja perumal Northern PC Statement
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலைக் கலவரங்கள், வெலிக்கடைச்சிறைப் படுகொலைகள் தொடர்பான நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம் நேற்று கரவெட்டிப் பிரதேசசபை மண்டபத்தில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலமையில் மாலை 4.30 மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எமது ஈழப்போராட்டம் 1987ஆம் ஆண்டே தோற்கடிக்கப்பட்டுவிட்டது. நாம் அப்பொழுதே ஒற்றுமையாய் இருந்திருந்தால் ஒரு தீர்வு கிடைத்திருக்கும். ஆனால் இன்று நாடாளுமன்ற தேர்தல், மாகாணசபைத் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் தமது பதவிகளையும், ஆசனங்களையும் தக்கவைப்பதற்காகவே செயற்படுகின்றன. தேர்தலை அடிப்படையாகக் கொண்டே ஒற்றுமை என்பது தெரிகிறது.
வடக்கு மாகாணசபை கோமாளிகளின் கூடாரமாக இருக்கிறது. மாகாண சபையில் 350 தீர்மானங்கள் நிறைவேற்றறப்படுள்ளன. அவற்றால் பயன் ஏதும் இல்லை. இன்றுவரை மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கவேண்டும் என்று எந்தவொரு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை.
நாற்பது வருட நீதிமன்ற அனுபவமுள்ள சட்டமேதை எந்தவொரு வழக்கையும் தமது அதிகாரத்தை வலியுறுத்தி தாக்கல் செய்யவில்லை. அலிபாபாவும் நாற்பது திருடர்களையும் போல மாகாண சபையில் நான்கு அமைச்சர்களும் ஊழல்வாதிகள் என்று முதல்வர் கூறினார். அப்படிப்பட்ட ஊழல்வாதிகளை அமைச்சர்களாக நியமித்த முதல்வரும் தானாகவே வெளியேறியிருக்கவேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.
எமது போராட்டம் தோற்றமைக்கு ஒற்றுமையின்மையே காரணம். நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் போராட்டம் தோற்றிருக்காது என்றார்.