50 வருடங்களாக கடலுக்குச் செல்லும் வீதியை மறித்த வர்த்தகர்: 175க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நெருக்கடி

0
146

ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வன்னி மண்ணின் மீனவர்கள் கடலுக்குச் செல்லப் பயன்படுத்திய பாதையை கம்பி வேலி அமைத்து மறித்துள்ள கரையோரத்தில் காணி வைத்திருக்கும் வர்த்தகர் ஒருவரின் செயற்பாட்டால் சுமார் 175ற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது வாழ்வாதாரத்தின் எதிர்காலம் தொடர்பில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதாக உறுதியளித்த கரைத்துறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள் அதுவரை இடையூறுகள் இன்றி தமது பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான பின்னணியை உருவாக்கித் தந்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காலஞ்சென்ற யாழ்ப்பாணம் ஆயர் யாக்கோபு பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளையின் தலையீட்டினால் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தியோநகர் மீனவ கிராமம் ஸ்தாபிக்கப்பட்ட 1973ஆம் ஆண்டு முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்லப் பயன்படுத்தும் வீதியின் சுமார் 200 மீற்றர் பகுதியானது யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ளது.

சுமார் 52 ஏக்கர் நிலம் 2017 அல்லது 2018இல் அவலோன் ரெசோட் அன்ட் ஸ்பா (Avalon Resort and Spa (Pvt) Ltd) என்ற நிறுவனத்தின் உரிமையாளரான கனேடிய பிரஜைக்கு விற்பனை செய்யப்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக காணியின் நடுவில் அமைந்துள்ள வீதியில் பயணிக்கும் போது குறித்த காணியின் உரிமையாளரால் பல்வேறு இடையூறுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 26ஆம் திகதி மாலை மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது வீதியின் குறுக்கே வேலி அமைக்கப்பட்டு கருங்கற்கள் குவிக்கப்பட்டிருந்தன.

நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்த வீதியை கடக்க தடையாக இருந்த வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்க மீனவர்கள், ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக தாம் பயன்படுத்தி வரும் வீதியை விடுவிக்கக் கோரி அன்றைய தினம் இரவே அந்த இடத்தில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

மீனவர்கள் பிடிக்கும் மீன்களை தரையிறக்குவதற்கும் இந்த வீதியே பயன்படுத்தப்படுவதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மே 27ஆம் திகதி, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரின் பிரதிநிதி, பிரதேச சபையின் செயலாளர், கிராம சேவகர் உள்ளிட்டவர்கள் போராட்டக்களத்தில் கிராம மக்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்தனர்.

நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில் தடையின்றி அதே வீதியை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

கடலுக்குள் செல்வதை தடுத்த குறித்த வர்த்தகர் படகுகளை நிறுத்திவைத்துள்ள கரையோர கடற்கரையின் உரிமையையும் வலியுறுத்தி அச்சுறுத்தி வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மணலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 175 மீனவர் குடும்பங்களின் 21 படகுகளை அகற்றக் கோரி காணி உரிமையாளர் சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்தல் அனுப்பியுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கிராமவாசியான நாகராசா சற்குணராஜ் தெரிவிக்கின்றார்.

“படகுகளை எடுக்குமாறு சட்டத்தரணி ஊடாக அறிவித்தல் அனுப்பியிருந்தார்கள். அவர்கள் வந்து ஐந்து வருடம். நாங்கள் வந்து 50 வருடம் ஏதோ அவர்கள் வந்த பின்னர்தான் நாங்கள் வந்ததுபோல் எங்களை எழும்பச் சொல்கிறார்கள். கடற்கரையில் சிறிய கூடாரங்களைக் கூட அமைக்க முடியாதாம். அதற்கும் தடை. அது எங்களது காணி என அச்சுறுத்துகின்றார்கள். ஏழாத நிலைமையில் எங்களது நான்கு படகுகள் வேறு இடத்திற்கு சென்றுள்ளன.”

யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இருந்து குறித்த வர்த்தகர் காணியை கொள்வனவு செய்த போது கணிசமான அளவு நிலம் கடலால் அரிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் உருவான கடற்கரைக்கு காணி உரிமையாளர் உரிமை கோருவதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மே 27 ஆம் திகதி கடற்பகுதி பிரதேச செயலகப் பிரதிநிதிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது அங்கு பிரசன்னமாகிய முன்னாள் வட மகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், இராணுவத்திற்கான காணி சுவீகரிப்புக்கு துரித கதியில் தலையீடு செய்யும் அரசாங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இம்மக்களின் பிரச்சினைகளுக்கு ஏன் தீர்வை வழங்க முடியாது என கேள்வி எழுப்பினார்.

“இதற்கானத் தீர்வை மாவட்டச் செயலகமோ பிரதேச செயலகமோ உரிய வகையில் இந்த கிராமத்திற்கும் மக்களுக்கும் வழங்க வேண்டும். அவர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக வழங்கலாம். இராணுவத்திற்கு காணி வேண்டுமெனின் சுவீகரித்து கொடுக்கின்றீர்கள், இந்த மக்களுக்கு, அது தனியார் சொந்தக் காணியாக இருந்தாலும் ஒரு நூறு, இருநூறு மீற்றர் காணியை ஏன் கொடுக்க முடியாது.

அப்போ இராணுவத்திற்கு காணியென்றால் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு நில அளவைத் திணைக்களம் என ஏற்பாடுகளைச் செய்யும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் ஏன் இந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வை தர முடியாது. இந்த கிராமத்து மக்களை அழிக்கும் செயற்பாடு என்றுதான் சொல்ல முடியும்.”

உறுதியளித்தமைக்கு அமைய தீர்வை வழங்காமல் மக்களை ஏமாற்ற முற்பட்டால் போராட்டம் மேலும் வலுவடையும் எனவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

“மக்களுக்கு ஒரு சிறிய உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மக்களை ஏமாற்ற முனைந்தால் இந்த போராட்டம் மேலும் வலுவாக முன்னெடுக்கப்படும்.”