கட்டார் நாட்டின் பொதுப் பணித்துறை அமைச்சு மற்றும் பொது சுகாதார அமைச்சு இணைந்து முன்னெடுத்த உலகின் மிகப்பெரிய ‘பாசிவ்’ ஆய்வகத் (World’s Largest Passive Laboratory) திட்டத்திற்கு இலங்கையைச் சேர்ந்த சிரேஷ்ட கட்டுமானத் துறை நிபுணர் அப்துல் சுக்கூர் முஹம்மது பர்ஸாத் கின்னஸ் உலக சாதனை சான்றிதழைப் பெற்றுள்ளார்.
கட்டாரில் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆய்வகம், பிராந்தியத்தின் சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். புதுமை மற்றும் நிலைபேறான தன்மைக்கு கட்டார் வழங்கும் முன்னுரிமையை இத்திட்டம் உலகிற்கு பறைசாற்றியுள்ளது.
இந்த பிரம்மாண்டமான திட்டத்தின் வர்த்தக ஆரம்பம் மற்றும் ஒப்பந்தங்களை நிறைவு செய்யும் பணிகளில் பர்ஸாத் சுக்கூர் ஆற்றிய காத்திரமான பங்களிப்பை அங்கீகரித்து இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அதிகார சபையின் கட்டிடத் துறை பொறியியலாளர் ஜாரல்லா முகமது அல்-மரியிடமிருந்து பர்ஸாத் சுக்கூர் இந்தச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
“இந்த கின்னஸ் உலக சாதனை கட்டாருக்கு பெருமை சேர்ப்பது மட்டுமல்லாமல் இது போன்ற பாரிய திட்டங்களை முன்னெடுக்கும் குழுப்பணி மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சிறந்த சான்றாகும்.
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டத்தில் பணியாற்றி அதற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைப்பதைக் காண்பதில் பெருமிதம் கொள்கிறேன்” என பர்ஸாத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.



