வைரமுத்து மற்றும் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிவரும் சின்மயிக்கு அவருடைய கணவர் ராகுல் ரவீந்திரன் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.(Singer Chinmayi controversy Rahul Ravindran open talk)
பாடகி சின்மயி சில நாட்களுக்கு முன்னர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். 14 வருடங்களுக்கு முன் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக வெளிநாடு சென்றிருந்த போது தன்னை தனியாக அறைக்கு வர சொன்னார் என்று கூறினார். இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பல சர்ச்சைகளைக் கிளப்பியது. இதுமட்டுமல்லாமல் பல பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களை சின்மயி மூலமாக வெளியிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் சின்மயிக்கு பலத்த ஆதரவும் கடுமையான எதிர்ப்பும் சேர்ந்தே வருகிறது. இது சம்மந்தமாக சின்மயியின் அம்மா தொலைக்காட்சிகளில் தோன்றி சின்மயி கூறுவது உண்மை என விளக்கமளித்தார். ஆனால் வைரமுத்துவுக்கு நெருக்கமான சிலர் இது ஆண்டாள் விவகாரத்துக்கான பழிவாங்கும் நடவடிக்கை என கூறி வருகின்றனர்
இது சம்மந்தமாக வைரமுத்து சின்மயி கூறும் குற்றச்சாட்டு பொய்யானது. வழக்கு தொடுத்தால் சந்திக்க காத்திருக்கிறேன் என்று காணொளி மூலம் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இப்படியாக இந்த சர்ச்சை விவகாரம் நீண்டு கொண்டே போகிறது.
ஆனால் இந்த விவகாரம் குறித்து இதுவரை பேசாமல் இருந்த சின்மயியின் கணவர் நடிகர் ராகுல் இப்போது சின்மய்யிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது டிவிட்டரில் ‘இந்த விவகாரத்தில் வேலை இல்லாத சிலர் என்னை தொந்தரவு செய்து வருகின்றனர். என்னுடைய மனைவி உங்களை அசௌரியத்துக்கு ஆளாக்கியிருக்கிறாள். ஏனென்றால் அவள் ஒரு தைரியமான அதிசயப் பிறவி. உங்கள் போலிக் கௌரவத்தை அவள் உடைத்து விடுவாள் என நீங்கள் பயப்படலாம். அது உங்கள் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு. உங்களுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ உலகம் சமநிலையை நோக்கி மாறிக்கொண்டு வருகிறது. அதுவரை இதுபோன்ற குரல்கள் கேட்டுகொண்டேதான் இருக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.