ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரேன் மீது மீண்டும் உக்கிர தாக்குதல் நடத்தும் ரஷ்யா!

0
121

வளைகுடாவில் ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியில் , உக்ரேன் மீதான போர் ஆரம்பமாகி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 948 ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு உக்ரேனின் இவானோ-பிராங்க்விஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளது. நகரின் முக்கிய மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் மகப்பேற்று நிலையம் பலத்த சேதமடைந்துள்ளன.

தாக்குதலின் போது இரு பெண்கள் நிலத்தடி அறையில் குழந்தையைப் பெற்றெடுத்த போதிலும் அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி தப்பியுள்ளனர். இப்பகுதியில் தந்தை ஒருவர் மற்றும் அவரது மகள் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் 06 வயது சிறுவன் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

லிவிவ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெர்னார்டைன் மடாலயம் இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமான இந்தப் பகுதியின் அருகே அமைந்துள்ள குடியிருப்பு கட்டடமொன்று ட்ரோன் மோதியதில் தீப்பற்றியுள்ளது.

இதில் லிவிவ் நகரில் மாத்திரம் 32 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 948 ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன. இதில் 556 ட்ரோன்கள் நேற்று பகல் வேளையில் மாத்திரம் ஏவப்பட்டுள்ளன. உக்ரேனியப் படைகள் சுமார் 906 ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ள போதிலும் 15 இடங்களில் நேரடித் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. வின்னிட்சியா நகரில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

செர்னிஹிவ், சுமியின் வடக்குப் பகுதியூடாக ட்ரோன்கள் “வரிசை வரிசையாக” உக்ரைன் வான் பரப்பிற்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி “ரஷ்யாவிற்கு இந்தப் போரை நிறுத்தும் எண்ணம் சிறிதும் இல்லை என்பதை இந்தத் தாக்குதலின் அளவு தெளிவாகக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.