சவுதி அரேபியாவின் தாயிஃப் நகரில் அமைந்துள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் நேற்று இடம்பெற்ற பயங்கர விபத்தில் ஒரு ராட்டினம் இரண்டாக உடைந்து விழுந்ததில் 26 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து ஏற்பட்டது “360 டிகிரி” என அழைக்கப்படும் அதிவேக சுழற்சி ராட்டினில் வழக்கம்போல சுற்றிவந்துக் கொண்டிருந்தபோது ராட்டினை தாங்கும் முக்கியமான கம்பம் திடீரென இரண்டாக முறிந்தது. இதனால் சவாரியில் இருந்த பயணிகள் திடுக்கிட்டனர்.
ராட்டினின் ஒரு பகுதி பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது. உடனடியாக பூங்கா ஊழியர்கள் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்கி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைவாக இருந்ததா என பொதுமக்களிடையே கேள்விகள் எழுந்துள்ளன.
சவுதி அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை அறிவித்துள்ளனர். பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.