போரினால் பறிபோகும் உயிர்கள்; 5 நாட்களில் 1,045 பேர் உயிரிழப்பு, 6,000 பேர் காயம்

0
21

ஈரான் -இஸ்ரேல் போரால் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில் ஈரான் முழுவதும் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,045 ஆக உயர்ந்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புதன்கிழமை அன்று இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானின் முக்கியப் பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தின. இதில் தலைநகர் தெஹ்ரான், புனித நகரமான கோம், மேற்கு ஈரான் பகுதிகள் மற்றும் மத்திய இஸ்ஃபஹான் மாகாணம் ஆகிய இடங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின.

இந்தத் தாக்குதல்களில் இராணுவ நிலைகள் மட்டுமன்றி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகங்களும் சேதமடைந்துள்ளதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தன்னார்வப் பிரிவான பாசிஜ் (Basij) துணை இராணுவப் படை கட்டிடங்கள் மற்றும் ஈரானின் உள் பாதுகாப்பு கட்டமைப்புடன் தொடர்புடைய அலுவலகங்களையே தாங்கள் இலக்கு வைத்ததாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்கள் குறித்து அல் ஜசீரா ஊடகவியலாளர் முகமது வால் தெரிவிக்கையில், “நாடு அனைத்து திசைகளிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதன் சுமையை அப்பாவிப் பொதுமக்களே சுமக்கின்றனர்,” எனக் குறிப்பிட்டார்.

மேலும், தற்போதைய நிலவரப்படி, 6,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும், இதில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக ஈரான் தனது எதிர்த் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. போர் தொடரும் பட்சத்தில் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் உள்ள இராணுவ மற்றும் பொருளாதார உட்கட்டமைப்புகள் அழிக்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அல் ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.