இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாளான இன்று (20) ஆட்டம் நிறுத்தப்பட்டபோது பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அதன்படி, பங்களாதேஷ் அணி தற்போது 187 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளனர். இன்று போட்டி ஆரம்பமான போது, இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 368 ஓட்டங்களுடன் களமிறங்கியது.
இருப்பினும் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களின் திறமையான பந்துவீச்சால் இலங்கை அணியின் இன்னிங்ஸ் 485 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
குறிப்பாக இலங்கை அணியின் இறுதி 4 விக்கெட்டுகள் வெறும் 15 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தமை கவனிக்கத்தக்கது. இலங்கை அணியின் இன்னிங்ஸை உயிர்ப்புடன் வைத்திருந்த கமிந்து மெந்திஸ் 87 ஓட்டங்கள் எடுத்து சாதனை ஒன்றை முறியடித்திருந்தார்.

குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 50+ ஓட்டங்களை 10 முறை எடுத்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை கமிந்து இதனூடாக தனதாக்கினார்.
கமிந்து இந்தச் சாதனையை 22 இன்னிங்ஸ்களில் எட்டினார், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ரோய் டயஸ் 23 இன்னிங்ஸ்களில் படைத்த சாதனையை கமிந்து மெந்திஸ் இவ்வாறு முறியடித்தார்.
பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 495 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. நாளை (ஜூன் 21, 2025) இப்போட்டியின் ஐந்தாவது மற்றும் இறுதி நாளாகும்.