கசிந்தது இந்தியாவின் தாக்குதல் திட்டம்: அணு ஆயுதத்துடன் களமிறங்குவதாக அறிவித்த பாகிஸ்தான்!

0
732

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக ரஷ்யாவுக்கான பாகிஸ்தானின் உயர்மட்ட தூதுவர் காலித் ஜமாலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவால் அவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்பட்டால் அணு ஆயுதங்கள் உட்பட முழு இராணுவ ஆயுதங்களையும் பாகிஸ்தான் பயன்படுத்த நேரிடும் என அவர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி பாகிஸ்தானின் சில பகுதிகளைத் தாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சில ஆவணங்கள் கசிந்துள்ளதாகவும், குறித்த தாக்குதல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் விடுத்த அணு ஆயுத அச்சுறுத்தல்களில் மிகவும் வெளிப்படையான ஒன்றாக இந்த எச்சரிக்கை கருதப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்துள்ள முறுகல் நிலைக்கு மத்தியில் ஜமாலியின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதலைத் திட்டமிட்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்து ஆதரவளிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தியா சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் பங்கீட்டை நிர்வகிக்கும் 1960 ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) இடைநிறுத்தியது.

இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பல போர்களை தடுப்பதற்கு உதவியதுடன் பதற்றமான இருதரப்பு உறவில் ஒரு அரிய உறுதிப்படுத்தும் ஏற்பாடாக நீண்ட காலமாகக் கருதப்பட்டது.

போர் என்பது பீரங்கிகளையோ அல்லது தோட்டாக்களையோ சுடுவது மட்டுமல்ல என்றும் அதற்கு பல முகங்கள் உள்ளதாகவும் அந்த முகங்களில் ஒன்று தண்ணீரைத் தடுப்பது அல்லது திசை திருப்புவது இது பசி மற்றும் தாகத்தால் இறப்புகளுக்கு வழிவகுக்கும் என பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் குறித்த ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததை ஒரு போர் நடவடிக்கை என்று கூறிய தூதுவர் காலித் ஜமாலி அதற்கு முழு அளவிலான அதிகாரம் உட்பட முழு பலத்துடன் பதிலளிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இதேவேளை பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் இராணுவம் நேற்றையதினம் அப்தாலி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தமையானது இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.