இங்கிலாந்து கேப்டனாக தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன்; ஜோஸ் பட்லர்

0
204

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட விரும்புவதாக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலிலும் 7ஆவது இடத்தில் உள்ளது. ஏற்கனவே உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. தொடர்ந்து 5 போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு நெதர்லாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட விரும்புவதாக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

“அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இங்கிலாந்து அணியை வழிநடத்த விரும்புகிறேன். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் ராப் கீ இந்தியாவிற்கு வந்து இங்கிலாந்து அணியுடன் இணைய உள்ளார் என்பது எனக்குத் தெரியும்.

அவரிடம் போட்டி குறித்து பேசுவோம். அடுத்த மாதம் வரவிருக்கும் தொடர்கள் குறித்து ஆலோசிப்போம். என்னால் அணிக்காக ரன்கள் குவிக்க முடியாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அதிலிருந்து மீண்டு ஃபார்முக்கு வருவேன்.

இந்த உலகக் கோப்பைத் தொடர் மிக முக்கியமானதாக எங்களுக்கு அமைந்துள்ளது. நாங்கள் நினைத்தது போன்று இந்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாடவில்லை. நேற்றையப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.“ என்றார்.