திருமண வீட்டில் வறுத்த கோழிக்காகச் சண்டை; கைகலப்பாக மாறிய சம்பவம்

0
26

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வறுத்த கோழி பரிமாறுவதில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

திருமண நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தபோது வறுத்த கோழித் துண்டுகள் சிலருக்குக் குறைவாகக் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் சில விருந்தினர்கள் மேலும் வறுத்த கோழித் துண்டுகள் கேட்டபோது பறிமாறுபவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறி சில விருந்தினர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்தச் சண்டையின் காட்சிகள் அங்கிருந்த ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. வைரலான வீடியோவில் ஆண்கள் சிலர் மாறி மாறி ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதும், மேசைகள் மற்றும் நாற்காலிகள் தூக்கி எறியப்படுவதும் தெளிவாகத் தெரிகிறது.

சண்டையை நிறுத்த அங்கிருந்த சிலர் முயன்றாலும் அதை அடக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் சண்டையிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிஜ்னோர் காவல் துறை தெரிவித்துள்ளது. திருமண வீடுகளில் பிரியாணி பற்றாக்குறைக்காகச் சண்டை நடப்பது வழக்கம் என்றாலும் வறுத்த கோழி பற்றாக்குறைக்காக நடந்த சண்டை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.