புதிய உச்சத்தை தொட்டுள்ள ஐரோப்பாவின் அதீத வெப்பம்

0
632

மேற்கு ஐரோப்பாவில் கொடிய வெப்ப அலை தாக்கி வரும் நிலையில் வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டிருப்பதோடு தீயணைப்பு வீரர்கள் புதிய காட்டுத் தீ சம்பவங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வழக்கமாக மிதமான காலநிலையைக் கொண்ட பிரிட்டனில், வெப்பநிலை முதல் முறையாக 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது.

ஜெர்மனியில் ஆண்டின் வெப்பமான நாள் பதிவாகி இருக்கும் அதே நேரம் கடந்த சில நாட்களாக அதீத வெப்பம் தாக்கி போர்த்துக்கலில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கண்டம் முழுவதும் காட்டுத் தீ பரவியுள்ளது. மிக மோசமான நிலையை எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டி இருக்கும் என்று ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தால் வெப்ப அலை அடிக்கடி நிகழும் ஒன்றாக மாறி இருப்பதோடு அதிக தீவிரம் கொண்டதாகவும் உள்ளது.

“எதிர்காலத்தில் இவ்வாறான வெப்ப அலைகள் சாதாரணமான ஒன்றாக இருக்கும். இதனை விடவும் கொடிய நிலையை நம்மால் பார்க்க முடியும்” என்று உலக வானிலை அமைப்பின் தலைவர் பெட்டரி டாலஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் முன்னர் காணாத கடும் வெப்பம் தவிர, அங்கு காட்டுத் தீயும் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸில் கடந்த திங்கட்கிழமை 64 வெவ்வேறு பகுதிகளில் வெப்பநிலை சாதனை உச்சத்தை பதிவு செய்திருந்தது.

வெப்ப அலை வடக்கு மற்றும் கிழக்கை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வரும் நிலையில் ஜெர்மனியில் தொடர்ந்து காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போர்த்துக்கலில் வெப்பநிலை கணிசமான அளவு வீழ்ச்சி கண்டபோதும், வெப்ப அலையுடன் தொடர்புபட்ட 1000க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கிரேக்கத்தில் ஏதன்ஸுக்கு அருகில் பென்டலியின் மலைப்பிராந்தியத்தில் காட்டுத் தீ கட்டுக்கடங்காது பரவி வருகிறது. இங்கு வீடுகள் சேதமடைந்திருப்பதோடு நான்கு பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இத்தாலியிலும் நேற்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தொட்டிருப்பதாக கூறப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் காட்டுத் தீ பரவி உள்ளது.