T20 உலகக் கிண்ண போட்டியை அமெரிக்காவில் நடத்தியதால் ஐசிசிக்கு இவ்வளவு நட்டமா?

0
113

2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண போட்டிகளை அமெரிக்காவில் நடத்தியதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ரூ.167 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையிலே இது தெரியவந்துள்ளது.

முக்கியமாக, நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மிக எதிர்பார்க்கப்பட்ட போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் அமெரிக்காவில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐ.சி.சி வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் அமெரிக்காவில் டி20 உலகக் கிண்ண தொடரை நடத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு இந்திய அணி செல்ல மறுப்பது, ஐ.சி.சி தலைவர் பதவி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

இதேவேளை, ஐ.சி.சி. தலைவராக இருக்கும் நியூசிலாந்தின் கிரேக் பார்கிளேவின் பதவிக்காலம் வரும் டிசம்பருடன் முடிவடைய உள்ளதால் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷாவை அடுத்த ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க வலியுறுத்தப்படலாம் எனவும் தெரியவருகிறது.